முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் மண்டல பூஜை துவக்கம்: சரண கோஷத்துடன் பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம்

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2023      ஆன்மிகம்
Sabarimala 2023-11-17

திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியதை முன்னிட்டு நேற்று சரண கோஷம் முழங்க பக்தர்கள் அதிகளவில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நேற்று தொடங்கியது. 

இதற்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். பின்பு 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது. 

அதை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ், மாளிகைபுரம் கோவிலின் புதிய மேல்சாந்தி பி.ஜி.முரளி ஆகியோர் இருமுடி கட்டி சன்னிதானம் நோக்கி வந்தனர். அவர்களுக்கு மேளதாளம் முழங்க 18-ம் படிக்கு கீழ் அழைத்து வரப்பட்டனர். 

பின்பு மாலை 6.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்திகள் மூலமந்திரம் கூறி பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்பு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு, சாவி புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோவில் நடையை திறந்து வைத்தார். பின்பு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெற்றது.

சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டதால் நேற்று முன்தினமே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மண்டல பூஜை தொடங்கியதையடுத்து நேற்றும் பக்தர்கள் குவிந்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமரிமலையில் திரண்டனர். 

சன்னிதானம், நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 

மேலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. பக்தர்கள் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து பம்பைக்கு பக்தர்கள் வருவதற்கு கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதி நடக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டல பூஜை முடிந்ததும் டிசம்பர் 27-ம் தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது. 

பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. டிசம்பர் 31-ம் தேதி முதல் ஜனவரி 15-ம்  தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். ஜனவரி 15-ம் தேதி மாலை 6.30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடை பெறும். 

தொடர்ந்து 19-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். மறுநாள் 20-ம் தேதி பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனம் செய்த பிறகு கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் மகர விளக்கு பூஜை நிறைவு பெறும். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து