முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா விவகாரம்: அமைச்சர்கள் குழு மீண்டும் கூடுகிறது

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக். 12 - தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவது பற்றி விவாதிப்பதற்காக நேற்று டெல்லியில் கூடிய திருத்தியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை குழு மீண்டும் வருகிற 19 ம் தேதி கூடி ஆலோசனை நடத்தவிருக்கிறது. நேற்று இந்த கூட்டத்தில் தெலுங்கானா மாநிலம் பற்றிய அடிப்படை விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்து விட்டது. ஆனால் இதற்கு அம்மாநிலத்தின் சீமாந்திரா பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். 

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவது பற்றி விவாதிப்பதற்காக திருத்தியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை குழு நேற்று டெல்லியில் கூடியது. இந்த குழுவின் தலைவராக உள்துறை அமைச்சர் ஷிண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையிலான அமைச்சரவை குழு நேற்று டெல்லியில் கூடி தெலுங்கானா மாநிலம் பற்றி விவாதித்தது. ஆனால் முக்கிய அமைச்சர்களான பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் கூட்டத்திற்கு வரவில்லை. இதனால் இந்த கூட்டம் மீண்டும் டெல்லியில் வரும் 19 ம் தேதி கூடி விவாதிக்கவிருக்கிறது. அதாவது முழு அளவிலான அமைச்சரவை கூட்டம் அன்று கூடி தெலுங்கானா பற்றி விவாதிக்கிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் நிருபர்களிடம் பேசுகையில், 

தெலுங்கானா தொடர்பாக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் நேற்று நடந்த கூட்டத்தில் அடிப்படை விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.இந்த கூட்டத்திற்கு பிறகு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் ஆந்திர மக்களின் நியாயமான கவலை களையப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த கூட்டத்தில் தெலுங்கானா தொடர்பான அனுகுமுறைகள் மற்றும் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்