முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக மாநில கவர்னரை திரும்பப் பெற பா.ஜ.க. கெடு

சனிக்கிழமை, 21 மே 2011      அரசியல்
Image Unavailable

பெங்களூர்,மே.21 - கர்நாடக மாநிலத்தில் அம்மாநில கவர்னரை டிஸ்மிஸ் செய்யக் கோரி போராட்டத்தை தீவிரப்படுத்த பாரதீய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. கவர்னர் பரத்வாஜை திரும்பப் பெற 5 நாள் கெடுவையும் பா.ஜ.க. விதித்துள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அம்மாநில கவர்னர் பரத்வாஜ் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து கவர்னர் சதி திட்டம் தீட்டி மாநிலத்தையே ஆளப் பார்க்கிறார் என்று எடியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார். இம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த வேண்டும் என்று கவர்னர் பரிந்துரை செய்ததும் இதையடுத்து கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஜனாதிபதி மாளிகையில் அணிவகுப்பு நடத்தியதும் தெரிந்ததே. 

இந்த நிலையில் தான் கவர்னர் பரத்வாஜ் மீது முதல்வர் எடியூரப்பா ஆவேசத்துடன் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். விதான்சவுதாவில் இருந்த படி கர்நாடகத்தை ஆளுவதற்காக காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து கவர்னர் சதி திட்டம் தீட்டியுள்ளார். அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அல்லது அவர் தாமாக விலக வேண்டும்.அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். கவர்னரை திரும்பப் பெற 5 நாள் கெடு விதிக்கிறோம் என்றும் எடியூரப்பா நிருபர்களிடம் தெரிவித்தார். 

முன்னதாக பெங்களூரில் பா.ஜ.க மாநில நிர்வாகிகள் அடங்கிய அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடியூரப்பா கலந்து கொண்டார். அப்போது கவர்னரை நீக்கி கர்நாடகத்தை காப்பாற்று என்ற பெயரில் ஒரு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் பொருட்டு 2 குழுக்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டம் இன்று முதல் 11 மாவட்டங்களில் நடைபெறும். கர்நாடகத்தில் கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையேயான மோதல் சிந்துபாத் கதை போல பல மாதங்களாக நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்