முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீ விபத்து: என்னை கொல்ல நடந்த சதியே! மம்தா ஆவேசம்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

மால்டா, ஏப்.20 - என்னைக் கொல்ல சதி நடந்துள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். 

மால்டாவில் மம்தா தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் மம்தா குளியல் அறையில் இருந்ததால் உயிர் தப்பினார். 

“அது விபத்து அல்ல, திட்டமிட்ட சதிச்செயல்” என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்குவங்க மாநிலம், பிர்பும் மாவட்டம் நல்ஹாட்டியில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: 

மால்டா ஓட்டல் அறையில் தங்கியிருந்தபோது குளியல் அறைக்குச் சென்றேன். அப்போது பயங்கர சத்தம் கேட்டது. அறை முழுவதும் புகை பரவியது. எதையும் பார்க்க முடியவில்லை. உடனடியாக எனது உதவியாளரை அழைத்தேன். 

அவர் ஓடி வந்து போர்வையால் மூடி என்னை பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தார். தீயணைப்புத் துறையினர் கூறிய போது, அறையில் விஷக் காற்று பரவியிருந்தது. அதை யார் சுவாசித்தாலும் உயிர்பிழைக்க முடியாது என்று தெரிவித்தனர். 

மேற்கு வங்க மாநிலம் முன்னேறி வருவது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர் கள் என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். என்னைக் கொன்றுவிட்டு மின்சார கசிவால் தீ விபத்து ஏற்பட்டதுபோல் சித்தரிக்க சதித் தீட்டம் தீட்டியுள்ளனர். 

என்னை கொலை செய்தாலும் மக்கள் மத்தியில் நான் மறுபடியும் பிறப்பேன். மக்களுக்காக நான் பாடுபடுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார். 

இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் மம்தா கூறியதாவது: 

ஓட்டல் அறையின் நச்சு புகையால் எனது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கள், முழு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் தேர்தல் நேரம் என்பதால் எனது பயணத் திட்டங்களை ரத்து செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். 

மால்டா ஓட்டல் அறை சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சதி இருப்பதாக ஆளும் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியிருப்பதால் அந்த கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்