முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவியில் இருந்து தயாநிதி நீக்கப்படுவாரா? பிரதமர் பேட்டி

வியாழக்கிழமை, 30 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.30 - காங்கிரஸ் கட்சியின் கட்டளை இருக்கும்வரை நான் பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன் என்று மன்மோகன் சிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள தயாநிதிமாறன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற கேள்விக்கும் மன்மோகன் சிங் பதில் அளித்தார்.  நீண்டநாட்களுக்கு பிறகு நேற்று பிரதமர் மன்மோகன் சிங், மூத்த பத்திரிகை ஆசிரியர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மீண்டும் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள். ஆட்சி இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கட்டளை எனக்கு இட்டு பிரதமராக்கியுள்ளது. அந்த கட்டளை இருக்கும்வரை நான் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிப்பேன் என்றார். காங்கிரஸ் கட்சியில் இளம் தலைமுறையினர் தலைமை ஏற்க வழி ஏற்படுத்திக்கொடுப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. இருந்தபோதிலும் எனக்கு கட்சி பொறுப்பை கொடுத்துள்ளது. கட்சி விரும்பும் வரை கடமையை நான் தொடர்ந்து ஆற்றுவேன். அதேசமயத்தில் காங்கிரஸ் விரும்பாவிட்டால் நான் அந்த பொறுப்பில் ( பிரதமர்) இருந்து விலகிக்கொள்வேன் என்றார். காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்கள், பொதுச்செயலாளர் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று கூறுகிறார்களே என்று கேட்டதற்கு மன்மோகன் சிங் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சில கஷ்டங்கள் இருக்கின்றன என்பதை மன்மோகன் சிங் ஒப்புக்கொண்டார். கூட்டணி அரசில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதேசமயத்தில் அடுத்த தேர்தலை நாடு சந்திக்கக்கூடாது என்பதில் கூட்டணி கட்சிகளிடையே கருத்தொற்றுமை இருப்பது தெரிகிறது. அதனால் தற்போதுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீடிப்பதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்றும் மன்மோகன் சிங் கூறினார். லோக்பால் மசோதாவுக்குள் பிரதமரையும் உட்படுத்துவது பற்றி குறிப்பிட்ட மன்மோகன் சிங், லோக்பால் மசோதாவுக்கள் பிரதமரையும் உட்படுத்துவதில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தவித ஆட்சேபகமும் இல்லை. அதேசமயத்தில் இது தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்குள் கருத்துவேறுபாடு இருக்கிறது.மத்திய அரசும் அதில் உல்ள அமைச்சர்களும் எதிர்க்கிறார்கள்.  மீதுமுள்ள நாட்களில் இதுகுறித்து பேசி கருத்தொற்றுமை காணப்படும் என்றும் மன்மோகன் சிங் கூறினார். நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் மற்றும் அமைச்சகத்தில் ஓட்டுக்கேட்டது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த மன்மோகன்சிங், இதுகுறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணைக்கு பிரணாப் உத்தரவிட்டார். புலனாய்வுத்துறையும் விசாரித்தது. இந்த விசாரணையில் திருப்தி இருப்பதாக முகர்ஜியும் தெரிவித்துள்ளார் என்று பிரதமர் கூறினார். நாட்டில் ஊழலை ஒழிக்க அனைத்து கட்சிகளும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஆனால் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது நாங்கள் (காங்கிரஸ்) ஒத்துழைப்பு கொடுத்தது மாதிரி தற்போது பாரதிய ஜனதா ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள அமைச்சர் தயாநிதி மாறனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருவது குறித்து கேட்டதற்கு இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அவர் முறைகேடு செய்திருந்தால் மாறனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மன்மோகன் சிங் கூறினார். தற்போது நிலவும் சர்வதேச சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த மன்மோகன் சிங்,அண்டை நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் இந்தியாவுக்கு கவலை அளிக்கும்படி உள்ளது. இதை ஒத்துழைப்பு மற்றும் கூட்டு அணுகுமுறை மூலம் சமாளிக்கப்படும் என்றார். பிரதமர் மன்மோகன் சிங் அளித்தை பேட்டியை மூத்த பத்திரிகையாளர் அலோக் மேத்தா நிருபர்களுக்கு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்