முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா: 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர்

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா: 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர்
காரைக்கால் - சனி பெயர்ச்சி விழா திருநள்ளாறு கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. சனிபெயர்ச்சியையொட்டி திருநள்ளாறில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நவக்கிரகங்களில் முக்கிய கிரகமான சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அது சனிப்பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சனி பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது.
ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வதே பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. எல்லா கிரகங்களும் பெயர்ச்சி அடைகிறது என்றாலும் சனிப்பெயர்ச்சி மற்றும் குருப் பெயர்ச்சியைத் தான் நாம் முக்கியமானதாகக் கருதுகிறோம்.
சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர மொத்தம் 30 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் இருந்து அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மற்றொரு ராசிக்கு சனி இடம் பெயர்தலையே சனிப்பெயர்ச்சி என்கிறோம்.
தற்பொழுது துலாம் ராசியில் உச்சம் பெற்ற கிரகமாக இருந்து வந்த சனீஸ்வர பகவான் விருச்சிக ராசிக்கு பழமையான திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நவ.2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.54 மணிக்கு இடம் பெயர்ந்தார். இந்த சனிப்பெயர்ச்சியை தமிழகத்தில் யாரும் பொருட்படுத்தவில்லை.
மிகப்பழமையான பஞ்சாங்கமாக கருதப்படும் வாக்கிய பஞ்சாங்க கணித முறைப்படி மார்கழி மாதம் 1-ம் தேதி (டிசம்பர் 16) பிற்பகல் 2.43 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு சனி பகவான் பிரவேசித்தார்.
தமிழ்நாட்டின் மத்திய மண்டலப் பகுதிகள் மற்றும் புகழ்பெற்ற திரூவாரூர் அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு, காரைக்காலின் திருநள்ளாறு ஆகிய தலங்களில் உள்ள சனீஸ்வர பகவான் ஆலயங்களிலும் நேற்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.
மிக அதிகமானதும் நல்லதுமான பலன்களை பெறப் போவது மிதுனம், கன்னி மற்றும் மகரம் ஆகிய ராசிகள். சனிபகவான் தன்னுடைய ஆறாமிட சஞ்சாரத்தின் மூலம் மிதுன ராசிக்கும் மூன்றாமிட சஞ்சாரத்தின் மூலம் கன்னி ராசிக்கும் மற்றும் பதினொறாமிட சஞ்சாரத்தின் மூலம் மகர ராசிக்கும் நற்பலன்களை வழங்க உள்ளார். கடகம், கும்பம் மற்றும் மீன ராசிகளுக்கு மத்திம பலன்களையும் வழங்க உள்ளார். அதே சமயம், மேஷம்,ரிஷபம் சிம்மம், துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேஷத்துக்கு அஷ்டம சனி, ரிஷபத்துக்கு கண்ட சனியும், சிம்மத்துக்கு அர்த்தாஷ்டம சனியும், விருச்சிகத்துக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனியும், தனுசுக்கு ஏழரைச் சனியில் விரய சனியுமாக அமைவதால் கெடு பலன்களுக்கான வாய்ப்பு இருக்கிறது.
திருநள்ளாறு திருத்தலத்தில் சனி கிரகத்தின் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி, அனுக்கிரக மூர்த்தியாக அபய வரத முத்திரையுடன் அருளாட்சி செய்கிறார். இங்கு சென்று ஒரு நாள் தங்கி வழிபடுவது நல்லது. சனிப் பெயர்ச்சிக்கு நேற்று செல்ல முடியாதவர்கள் பதினைந்து நாள் முன்போ, பின்போ கூட செல்லலாம். திருக்கொள்ளிக்காட்டில் உள்ள சனீஸ்வரர் பொங்குசனீஸ்வரராக அருள் பாலிக்கிறார்.
மதுரை மாவட்டம், தேனியிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள குச்சனூரிலும் சனீசுவரர் மிக கீர்த்தி பெற்றவராக விளங்குகிறார். கல்தூண் போன்ற உருவத்தில சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். நாமக்கல் அருகிலுள்ள தத்தகிரி முருகன் ஆலயத்தில் அமர்ந்த நிலையில் எட்டடி உயரமான சனீஸ்வரர் மேற்கு நோக்கி ஆலயம் கொண்டுள்ளார். சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் 'வட திருநள்ளாறு' என்ற பெயரில் மனைவியுடன் அற்புதக் காட்சி தருகிறார் சனீஸ்வரர். மும்பையில் சனீஸ்வரனுக்கு சிறிய தனிக் கோயில்கள் நிறைய உண்டு. நாசிக் அருகிலுள்ள சனி சிங்கணாப்பூரில் சனி பகவான் நான்கடிக்கு மேற்பட்ட உயரத்தில் பாறை வடிவில் சுயம்புவாகக் காட்சி தருகிறார்.
சனி பெயர்ச்சி விழா திருநள்ளாறு கோவிலில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. சனிபெயர்ச்சியையொட்டி நேற்று முன்தினம் இரவு சனி பகவான் தங்க காக்கை வாகனத்தில் அங்குள்ள வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டதும் பகவானுக்கு தனுர்மாத பூஜைகளும், தொடர்ந்து சனிபெயர்ச்சி சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன.
சனி பெயர்ச்சி விழாவில் கலந்து கொண்டு பகவானை தரிசனம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருநள்ளாறுக்கு நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் குவிந்தவண்ணம் இருந்தனர். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது. பக்தர்கள் முதலில் அங்குள்ள நளதீர்த்த குளத்திற்கு சென்று புனித நீராடி விட்டு குளக்கரையில் உள்ள நளன் கலிதீர்த்த விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். ஒரே நேரத்தில் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் வரை நீராடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
சனி பெயர்ச்சி விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் முதல் கோவிலின் முழு பாதுகாப்பும் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இன்று வரை கோவில் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருக்கும்.
பக்தர்களின் வசதிக்காக திருநள்ளாறுக்கு புதுவை அரசு போக்குவரத்து கழகமும், தமிழ்நாடு காரைக்கால் அரசு போக்குவரத்து கழகமும் சிறப்பு பஸ்களை இயக்கின. புதுச்சேரி, சென்னை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்சியில் இருந்து சிறப்பு ரயி்ல்களும் இயக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து