முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கான தடை நீக்கம்: மத்திய அரசு புதிய சட்டம்

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது, கால்நடை விற்பனை தொடர்பாக புதிய சட்ட வரையரை ஒன்றை மத்திய சுற்றுச்சூழல் துறை உருவாக்கி உள்ளது
மாடுகளை இறைச்சிக்காக விற்பதற்கு மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் தடை விதித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த தடையை கடுமையாக எதிர்த்தனர். அந்த மாநிலங்களில் மாட்டிறைச்சி முக்கிய உணவாக இருப்பதால் எதிர்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் இந்த தடையை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டு தடையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அதன்பின்னர் இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. சுப்ரீம் கோர்ட்டு தடை ரத்தை உறுதிசெய்தது. இந்த நிலையில் கால்நடை விற்பனை தொடர்பாக புதிய சட்டம் வரையரை ஒன்றை மத்திய சுற்றுச்சூழல் துறை உருவாக்கி உள்ளது. ‘மிருகங்கள் வதை தடுப்பு மற்றும் மிருகங்கள் விற்பனை விதிகள் 2018’ என்ற பெயரில் இந்த வரையரை உருவாக்கப் பட்டுள்ளது.

அதில் இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொண்டு வந்திருந்த தடை விதிகளின்படி மாடுகளை விற்பனை செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. விற்பவரும், வாங்குபவரும் மாடு இறைச்சிக்காக விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மாடுகளை வாகனங்களில் ஏற்றிச்செல்வதிலும் அதிக கட்டுப்பாடுகள் இருந்தன. இதனால் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மாடுகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்தனர். இப்போது அந்த விதிமுறைகள் எல்லாம் தளர்த்தப்பட்டுள்ளது.

மேலும் மாநில எல்லைகளில் 50 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும், நாடுகளின் எல்லையில் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மாட்டுச்சந்தை செயல்படக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எல்லை பகுதியில் மாட்டுச்சந்தை செயல்படக்கூடாது என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. அதில் எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும் என்று வரையரை எதுவும் சொல்லப்படவில்லை. இவ்வாறு புதிய விதிமுறையில் ஏராளமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. எனவே இனி இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு எந்த தடையும் இருக்காது. அதேபோல மாடுகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஏற்றிச் செல்வதற்கும் எந்த நிபந்தனையும் இருக்காது.

அதே நேரத்தில் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் மிருகங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று ஏற்படுத்த வேண்டும். அவர்கள் விதிக்கும் விதிமுறைகள்படி நடந்து கொள்ள வேண்டும். விலங்குகள் சந்தையில் உரிய வசதிகள் ஏற்படுத்த வேண்டும். வதை ஏற்படாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த புதிய விதிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது. புதிய வரையரை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 30 நாட்களுக்கு கருத்துக்கள் கேட்கப்படும். அவை வந்ததற்கு பிறகு வரையரை இறுதி செய்யப்பட்டு சட்டமாக கொண்டு வரப்படும்.  இந்த புதிய வரையரைக்கு மிருகவதை தடுப்பு இயக்கத்தினர் கடுமையாக எதிர்பபு தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து