முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவை தாக்கியது மங்குட் புயல்: 24.5 லட்சம் பேர் வெளியேற்றம்

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : பிலிப்பைன்ஸ் மற்றும் ஹாங்காங்கை சூறையாடிய மங்குட் புயல் மெல்ல நகர்ந்து சீனாவையும் அதிரடியாக தாக்கியது.
இதுகுறித்து சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவா கூறியதாவது:

பசிபிக் பெருங்கடலில் உருவான மங்குட் புயலின் தாக்கம் பிலிப்பைன்ஸ், ஹாங்காங்கைத் தொடர்ந்து தற்போது சீனாவின் பக்கம் திரும்பியுள்ளது. சக்திவாய்ந்த மங்குட் புயல் தெற்கு சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் உள்ள ஜியாங்மென் கடற்கரை நகரத்தை கடுமையாகத் தாக்கியது. அப்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.

மங்குட் புயல் தாக்கத்தின் அச்சம் காரணமாக பாதுகாப்பு கருதி அங்கு வசித்த 24.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும், 48,000 மீன்பிடிப் படகுகள் கடலுக்குள் இருந்து மாகாணத்தின் துறைமுகத்துக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.

மங்குட் புயலின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் 29,000 இடங்களில் நடைபெற்றுவந்த கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டன. 632 சுற்றுலாத் தளங்களும் மூடப்பட்டன.

முன்னதாக, ஹெய்னன் மாகாணத்தில் உள்ள இரண்டு விமான நிலையங்களில் 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து கடற்கரை நகரங்களையொட்டியுள்ள ரிசார்ட்டுகள், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.

மங்குட் புயலால் ஞாயிற்றுக்கிழமை காலை பலத்த காற்றுடன் கன மழையும் பெய்தது. இதனால், தென் சீன நகரங்களான குவாங்டங், ஹெய்னன், குவாங்ஸி ஜுவங் உள்ளிட்ட தன்னாட்சி பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

குவாங்டங் மாகாணத்தைப் பொருத்தவரையில் பொதுமக்களுக்கு உதவுவதற்காக உள்ளூர் நிர்வாகத்தினர் 3,777 அவசரகால முகாம்களை அமைத்துள்ளனர். அம்மாகாணத்திலிருந்து மட்டும் சுமார் 1,00,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ராணுவ படைகள் கடற்கரை நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ள அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்ற 1,000 உயிர்காக்கும் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து