முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி.க்கள் செயலிழந்த விவகாரம்: பாதுகாப்பில் எந்தவித குளறுபடியும் இல்லை: மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அருணா விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024      தமிழகம்
Nilgiri-CCTV-2024-04-28

உதகை, நீலகிரி ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி.க்கள் செயலிழந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அருணா, பாதுகாப்பில் எந்தவித குளறுபடியும் இல்லை என்றும் அத்துமீறல் நடக்க வாய்ப்பில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

70.93 சதவீத வாக்குகள்.... 

நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதன்படி இரு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், தலா ஒரு கட்டுபாட்டு கருவிகள், விவிபாட் என மொத்தம் 7,942 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. நீலகிரி தொகுதியில் 70.93 சதவீத வாக்குகள் பதிவானது. இதைத்தொடர்ந்து உதகை, குன்னூர், கூடலூர், அவிநாசி, பவானிசாகர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.

பாதுகாப்பு பணியில்... 

இதன் பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் ஸ்ட்ராங் ரூம் என்றழைப்படும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு ஏற்கெனவே கட்டமிடப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு தேர்தல் அதிகாரிகள் முன் சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசியல் கட்சி சார்பாக முகவர்கள் அங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர். இங்கு 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸார் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் தங்கி இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை டிவி மூலம் பார்வையிட்டு கண்காணித்து வந்தனர்.

ஒளிபரப்பாகாததால்... 

இந்நிலையில் சனிக்கிழமை மாலை முகவர்கள் அமரும் இடத்தில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் திடீரென டிவி திரையில் ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மு.அருணா சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து தொழில்நுட்ப கோளாறு பிரச்சினையை உடனடியாக சரி செய்யுமாறு அறிவுறுத்தினார். உடனடியாக இதுகுறித்து அங்குள்ள தொழில்நுட்பபிரிவு அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து சரி செய்தனர். இதன் பின்னர் 20 நிமிடங்களுக்கு பிறகு வழக்கம்போல் கண்காணிப்பு கேமரா பதிவுகள் திரையில் இயங்கியது. 

செயலிழந்து விட்டன...

இந்நிலையில் இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான மு.அருணா கூறியதாவது: “நீலகிரி தொகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் (நேற்று முன்தினம் மாலை) 20 நிமிடங்கள் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து விட்டன. இது சம்பந்தமாக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகிறது. கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தபிறகு இயந்திரங்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும் கல்லூரியை சுற்றி 173 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசியல் கட்சி முகவர்களும் கண்காணித்து வருகின்றனர்.

3 அடுக்கு பாதுகாப்பு... 

அரசு பாலிடெக்னிக் கல்லூரியை பொருத்தவரை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு சிறப்பு போலீஸார் மற்றும் நீலகிரி போலீஸார் என 3 அடுக்கு பாதுகாப்பு உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து இருந்தாலும் பாதுகாப்பில் எந்த குறைபாடும் ஏற்படவில்லை, ஏனென்றால் முதலாவதாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை மீறி வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைக்குள் யாரும் செல்ல முடியாது. மேலும் அரசியல் கட்சியினர் சார்பிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது. எனவே எந்த விதிமீறலும் நடைபெற வாய்ப்பு இல்லை. இது மட்டுமின்றி தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்கள் யார் வேண்டுமானாலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிடலாம்.

20 நிமிடங்கள் வரை...

அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்துவிட்டன. மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்கள் 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல்படவில்லை. அந்த குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை. உடனடியாக தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் கூலர்ஸ் வைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.  மாலை கட்சி வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட வருகின்றனர். எனவே பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. பாதுகாப்பில் எந்தவித குளறுபடியோ, அத்துமீறலோ இல்லை. மேலும் எதிர்காலத்தில் இதுபோல் எந்த பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ள தனியாருக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது”, என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து