முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் மாநிலத்தில் பிச்சைக்காரர்களுக்கு வங்கி

சனிக்கிழமை, 28 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

கயா - பீகார் மாநிலம் கயா நகரில் புகழ்பெற்ற மங்கள கவுரி ஆலயம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் இந்த கோவில் பகுதியில் ஏராளமான பிச்சைக்காரர்கள் வசித்து வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பிச்சை எடுப்பது ஒன்றே அவர்களது தொழிலாகும். சமீபத்தில் கயா நகரில் பிச்சை எடுக்கும் சுமார் 60 பிச்சைக்காரர்கள் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் பிச்சை எடுப்பவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வங்கி ஒன்று தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த மாதம் பிச்சைக்காரர்களின் வங்கி தொடங்கப்பட்டது. இந்த வங்கிக்கு மங்களா வங்கி என்று பெயரிடப்பட்டுள்ளது.  மங்கள கவுரி ஆலய பகுதியில் அதிக பிச்சைக்காரர்கள் உள்ளதாலும், அந்த கடவுள் பெயராலும் வங்கிக்கு பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக பிச்சைக்காரர்கள் கூறினர். இந்த வங்கியின் மேனேஜராக ராஜ்குமார் மஞ்ச்கி என்ற பிச்சைக்காரர் பதவியேற்றுள்ளார். இவரது மனைவி தேவி பட்டப்படிப்பு படித்துள்ளதால் அவர் கேஷியர் பொறுப்பை வகிக்கிறார். மாலதி தேவி என்ற பிச்சைக்காரி வங்கி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு வாரம் முழுவதும் எடுக்கும் பிச்சையில் சாப்பிட்டது போக மிச்ச பணத்தை செவ்வாய்தோறும் வங்கியில் கட்டி விட வேண்டும் என்று பிச்சைக்காரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி பிச்சைக்காரர்கள் ரூ. 20 முதல் அதிகபட்சமாக ரூ. ஆயிரம் வரை டெபாசிட் செய்து வருகிறார்கள். பிச்சைக்காரர்களால் பிச்சைக்காரர்களுக்காவே நடத்தப்படும் இந்த வங்கியில் இருந்து பிச்சைக்காரர்கள் அவசரத்துக்கு கடன் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு பிச்சைக்காரர் தன் மனைவி தீக்காயம் அடைந்ததால் ரூ. 8 ஆயிரம் கடன் பெற்றார். 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரையிலான வட்டி தொகையில் அந்த கடன் வழங்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள பிச்சைக்காரர்களுக்கு அரசிடம் மனு செய்து ஆதார் அட்டை பெற்று கொடுக்க உள்ளதாக பிச்சைக்காரர்கள் வங்கி மேலாளர் ராஜ்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து