முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்மூழ்கி கப்பல் ரகசியம் எங்களிடம் இருந்து கசியவில்லை: மும்பை நிறுவனம் உறுதி

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

மும்பை  - ‘‘ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்கள், எங்கள் நிறுவனத்தில் இருந்து கசியவில்லை. இதுதொடர்பாக கப்பல் படை நடத்தி வரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்’’ என்று மசாகான் டாக் நிறுவன மூத்த அதிகாரி உறுதியாக தெரிவித்துள்ளார்.  இந்திய கப்பல் படைக்காக உருவாக்கப்பட்டு வரும் ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்த ரகசியங்களை, ஆஸ்திரேலியாவின், ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகை வெளியிட்டது. மொத்தம் 22,400 பக்கங்களில் நீர்மூழ்கிக் கப்பலின் எல்லா தகவலும் வெளியாகி உள்ளதால் இந்தியா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

பிரான்சின் டி.சி.என்.எஸ். என்ற கப்பல் கட்டும் நிறுவனம்தான், ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது.  மும்பையில் உள்ள மசாகான் டாக் லிமிடெட் நிறுவனத்தில் ஸ்கார்பீன் கப்பல் ஒன்று உருவாக்கப்பட்டு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 5 கப்பல்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நீர்மூழ்கி கப்பல் ரகசியங்கள் கசிந்தது எப்படி என்பதில் பல மர்மங்கள் நீடிக்கின்றன. தங்கள் நாட்டில் இருந்து ரகசியங்கள் வெளியாகவில்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் மறுத்தார். டி.சி.என்.எஸ். நிறுவனமும் இதையே கூறியது.

அதேபோல் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், கப்பல் படை அதிகாரிகளும் இந்தியாவில் இருந்து கசியவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் ரகசியங்கள் எப்படி கசிந்தன என்பதில் மர்மம் நீடிக்கிறது. இந்நிலையில் மசாகான் டாக் லிமிடெட் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர், கூறியதாவது:

ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய ரகசியங்கள், எங்கள் நிறுவனத்திடம் இருந்து வெளியாகவில்லை. மசாகான் டாக் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், இங்கு நடக்கும் பணிகள் குறித்த ஆவணங்கள், தகவல்களை எல்லாம் மிக கடுமையான விதிமுறைகளின்படி பாதுகாத்து வருகிறோம். எனவே, எங்கள் தரப்பில் இருந்து ரகசியங்கள் வெளியாகவில்லை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

மேலும், தற்போது வெளி யாகி உள்ள தகவல்கள் உண்மை யானவைதானா என்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.  கப்பல் படை நடத்தி வரும் விசாரணைக்கு நாங்கள் உதவி வருகிறோம். இவ்வாறு மசாகான் டாக் லிமிடெட் நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்