முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரண தண்டனையை நிறைவேற்ற தூக்கிலிடுவதை தவிர வேறு முறை உண்டா? மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கேள்வி

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மரண தண்டனையை நிறைவேற்ற தூக்கிலிடும் முறை தவிர வேறு ஏதாவது முறை உள்ளதா? என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

இந்தியாவில் கொடும் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களை சாகும் வரை தூக்கிலிடுவதன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்த முறையை எதிர்த்து வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
 ‘‘ஒரு மனிதர் உயிரிழக்கும்போதும் கவுரவமான முறையில் உயிரிழக்க வேண்டும் என்று அரசியல் சட்டம் பிரிவு 21-ல் கூறப்பட்டுள்ளது. தூக்கிலிட்டு கொல்லும்போது அவரது கவுரவம் அழிந்துபோகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர் குறைவான வலியுடன் இறக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் தூக்கிலிடும் முறை ஒழிக்கப்பட்டு வேறு வழிகளில் மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது. எனவே, தூக்கிலிடும் முறையை ஒழிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த்,
‘‘தூக்கிலிடுவதன் மூலம் மரண தண்டனையை நிறைவேற்றும் முறைதான் சாத்தியமானது. விஷ ஊசி மூலம் மரண தண்டனையை நிறைவேற்றுவது சரிவராது’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘எந்த முறையில் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் சொல்லமுடியாது. தூக்கிலிடுவதைத் தவிர வேறு ஏதாவது முறை உள்ளதா? வெளிநாடுகளில் தூக்கிலிடுவதற்கு பதிலாக என்ன முறை பின்பற்றப்படுகிறது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்’’ என்று கூறி, மத்திய அரசு பதிலளிக்க 4 வாரங்கள் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து