முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதரபுரத்தில் சீரான குடிநீர் விநியோகத்திற்கு ரூ.11 கோடியில் பணிகள்- அமைச்சர் மணிகண்டன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்-ராமநாதபுரம் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகத்திற்கு ரூ.11.26 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.
     ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர், அரசு முதன்மைச் செயலாளர் (தகவல் தொழில்நுட்பவியல் துறை) டாக்டர்.பி.சந்திரமோகன் முன்னிலையில் மாவட்டத்தில்   மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் , பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் ஆகியவை குறித்து  ஆய்வு செய்தார்கள்.  மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் உடனிருந்தனர். இதன்பின்னர் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப் பணிகள், மேற்கொள்ளப்படவேண்டிய மேம்பாட்டு பணிகள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து  அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்;டத்தில் தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலையில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர்; விநியோகம் செய்திட ஏதுவாக நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.11.26 கோடி மதிப்பில் 396 குடிநீர் திட்டப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அவற்றில் 187 பணிகள் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 
மேலும் நிலத்தடி நீர்; உப்புத் தன்மை கொண்டதாக உள்ள கிராமங்களில் ஆய்வு செய்யப்பட்டு அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 107 இடங்களில் உப்புநீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.  அவற்றில் 33 இடங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  மேலும் திருவாடானை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தீவிர ஆய்வு செய்யப்பட்டு 1200 அடிக்கு கீழ் நல்ல குடிநீர் கிடைப்பதை கண்டறிந்து அவ்விடங்களில் ஆழ்குழாய் அமைத்து குடிநீர் விநியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை புனரமைத்திடும் வகையில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்பில் 99 ஊரணிகளிலும், நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ரூ.20.15 கோடி மதிப்பில் 53 கண்மாய்களிலும், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.66 கோடி மதிப்பில் 76 ஊரணிகள், 77 கண்மாய்களிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அதேபோல குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.31.20 கோடி மதிப்பில் 64 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்படவுள்ளன.  மேலும் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சியினை மேம்படுத்திடும் விதமாக சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ.15.86 கோடி மதிப்பிலும், இராமாயண சர்க்யூட் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பிலும், மேம்பாட்டு பணிகளுக்கு பூர்வாங்க பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. 

மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் அரசு சட்டக்கல்லூரி துவங்கப்பட்டு தற்போதைய சூழ்நிலையில் தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது.  இக்கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு ஏதுவாக போதுமான அளவு இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன.  அதேபோல தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படவுள்ளது.  ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய கிராமப் பகுதிகளில் உள்ள மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைத்திட வேண்டும்  எனவும், ராமநாதபுரம் நகரப்பகுதியில் அரசு அலுவலர்களுக்கான தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் அமைத்திட வேண்டும் எனவும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடத்தில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.  அந்தவகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்திடவும், இராமேஸ்வரம் பகுதியில் புதிய கலைக்கல்லூரி அமைத்திடவும், இராமநாதபுரம் பகுதியில் புதிய தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் கட்டிடவும்  தேவையான இடவசதியினை தேர்வு செய்து தயார் நிலையில் இருந்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் எதிர்வரும் மழைக்காலத்தில் மாவட்டத்தில் டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  குறிப்பாக நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி வாரியாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த அலுவலர்கள், சுகாதாரத்துறை சார்ந்த அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து சுற்றுப்புற சுகாதார பணிகளை மேற்கொள்ளவும், கொசுப்புழு உற்பத்தியினை தவிர்த்திடும் வகையில் சாலையோரங்களில் தண்ணீர் தேங்காமல் சுத்தமாக பராமரித்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக அமைச்சர் டாக்டர் மணிகண்டன் சமூகநலத்துறையின் சார்பாக 10 பயனாளிகளுக்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு முதிர்வுதொகையாக ரூ.13.70 லட்சம் மதிப்பிலான காசோலைகளையும் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட  429 ஊராட்சிகளிலும்  கிராம ஊராட்சி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்திட  ஏதுவாக சம்பந்தப்பட்ட  11 ஊராட்சி ஒன்றிய ஆணையர்களிடத்தில் மொத்தம் ரூ.25.74 லட்சம் மதிப்பிலான காசோலைகளையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹென்சிலீமா அமாலினி, பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) அமிர்தலிங்கம் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து