முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட கொப்பரை: தி.மலை.யில் இன்று மகா தீபம் ஏற்றம்

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      ஆன்மிகம்
Thiruvannamalai 2022 12 05

Source: provided

தி.மலை : கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி ஐந்தரை அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரை மலை மீது எடுத்து செல்லப்பட்டது. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாதீப திருவிழா கடந்த நவம்பர் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 10 நாள் காலை இரவு என இரு வேளைகளிலும் பஞ்சபூர்த்திகள் மாடவீதி உலா வருகின்றனர். விழாவில் 7-ம் நாளான கடந்த 3-ம் தேதி பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம் நடைபெற்றது. கார்த்திகை தீப விழாவின் உச்ச நிகழ்வாக இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது. 

இதற்காக தயார் செய்யப்பட்டுள்ள ஐந்தரை அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரை தயார் செய்யப்பட்டு நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலை மீது எடுத்து செல்லப்பட்டது.  இதற்காக 4500 கிலோ நெய் மற்றும் 1500 மீட்டர் காடா துணி தயார் நிலையில் வைக்கப்பட்டு அதனையும் மலைக்கு கொண்டு சென்றனர். 

தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே  கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும். இதையடுத்து பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். 

அதைத் தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். 

அப்போது கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மகா தீபம் ஏற்றியதும் கிரிவலப்பாதையில் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள்.

கார்த்திகை தீப திருவிழாவில் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகம் உட்பட 4 மாநில கவர்னர்கள் மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் வருகை தர உள்ளனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து