முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 லட்சம் மாற்றுத்திறனாளிகளின் விவரம் அடங்கிய தரவுத்தளம் உருவாக்கப்படும்: ஓய்வூதியதாரர்களுக்கு 1,444 கோடி ரூபாய் ஒதுக்கீடு

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
Budget-3 2023 03 20

அரசுத் திட்டங்களின் பலன்கள் முழுமையாக மாற்றுத்திறனாளிகளைச் சென்றடைய, மாற்றுத்திறனாளிகள் பற்றிய ஒரு விரிவான தரவுத்தளத்தை அரசு உருவாக்கி வருகிறது. இதன் முதற்கட்டமாக, பல்வேறு அரசு நலத்திட்டங்களில் பயன்பெறும் 9,08,000 பேர்களின் விவரங்கள் கொண்ட தரவுத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்காக ரூ.1,444 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது மாற்றுத்திறனாளிகள் நலன்துறைக்கான புதிய திட்டங்களையும், அதற்கான நிதி ஓதுக்கீட்டு விவரங்களையும் அவர் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு: மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரையே முத்தமிழறிஞர் கலைஞர்தான் சூட்டினார் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இந்தத் துறை மிக முக்கியமானது என்பதால், முதல்வர் தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வைத்து, பணிகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்.

உலக வங்கி நிதியுதவியுடன் 1,763 கோடி ரூபாய் மதிப்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைத் திட்டம் (RIGHTS Project) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய தடையற்ற கட்டமைப்புகளை அமைத்து, தொழில் பயிற்சி மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் ஒன்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

இத்திட்டம், 2023-24 ஆம் ஆண்டில் 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். உடல் குறைபாடு மதிப்பீட்டுச் சான்றளித்தல், ஆரம்ப நிலை சிகிச்சை போன்ற சேவைகளை கோட்ட அளவிலேயே வழங்க 39 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்படும். மேலும், வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களில் சலுகைகளைப் பெற உதவுவதற்காகவும் தன்னார்வலர்களைக் கொண்ட 150 அண்மை மையங்கள் உருவாக்கப்படும்.

மாநிலம் முழுவதும் 6.84 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அவர்களின் ஓய்வூதியத்தை 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையை 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும் உயர்த்திட முதல்வர் ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார். இதற்கென, வரவு-செலவுத் திட்டத்தில் 1,444 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் தொழில் முன்னேற்றத்திற்காக கடன் உத்தரவாதம், வட்டி மானியம் ஆகியவற்றை மாநில அரசு வழங்கி வருகிறது. இதன் பயனாக, 11,155 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக 50 கோடி ரூபாய் கடனுதவியை இந்த ஆண்டில் வழங்கி, நாட்டிலேயே முதல் இடத்தில் தமிழ்நாடு விளங்குகிறது.

அரசுத் திட்டங்களின் பலன்கள் முழுமையாக மாற்றுத்திறனாளிகளைச் சென்றடைய, மாற்றுத்திறனாளிகள் பற்றிய ஒரு விரிவான தரவுத்தளத்தை அரசு உருவாக்கி வருகிறது. இதன் முதற்கட்டமாக, பல்வேறு அரசு நலத்திட்டங்களில் பயன்பெறும் 9,08,000 பேர்களின் விவரங்கள் கொண்ட தரவுத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து