முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாத மக்கள்? - தமிழ்நாட்டில் 2019 தேர்தலை விட 3 சதவீதம் குறைந்த வாக்குப்பதிவு

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2024      தமிழகம்
Voting-machin 2024-04-10

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 2019 பாராளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை விட 3 சதவீதம் குறைவாகவே இந்தாண்டு தேர்தலில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நேற்று(ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெற்றது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிக்கும்,  புதுச்சேரியில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.  சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாலை 6 மணியளவில் வரிசையில் நின்றவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.  இறுதியாக வாக்கு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நேற்று முன்தினம் இரவு 7 மணி நிலவரப்படி,  தமிழ்நாட்டில் மொத்தம் 72.09% வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார். பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி,  தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியதாக அறிவிக்கப்பட்டது.  அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

கடந்த முறை நடைபெற்ற தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இந்த முறை நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்துள்ளது.  கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 72.44 சதவீத வாக்குகள் பதிவானது.  அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 82.41 சதவீத வாக்குகளும்,  குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 57.07 சதவீத வாக்குகளும் பதிவாகின.  

2019 தேர்தலை விட சுமார் 3 சதவீத வாக்குகள் குறைவாகவே தற்போதைய 2024 தேர்தலில் பதிவாகியுள்ளன. 2014 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 73.70 சதவீத வாக்குகள் பதிவானது. 2014ம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிடுகையில் இந்தாண்டு தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் 4.24 சதவீத குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு தேர்தலின் போதும்,  100 சதவிகித வாக்குப்பதிவு வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளும் முன்னெடுப்புகளும் எடுக்கப்பட்டு வந்தாலும், அடுத்தடுத்த தேர்தல்களில் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து