முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      இந்தியா
UGC-NET

புதுடெல்லி, க்யூட்,  நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்தார்.

இந்த தேர்வுகளில் ஒரே தாளுக்கு பல்வேறு தவணைகளில் தேர்வு நடத்தப்பட்டு வந்ததால், ஒவ்வொரு தவணையிலும் அந்தத் தாளில் தேர்வெழுதிய மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படும்.  தேர்வில் மாணவர் பெற்ற மதிப்பெண் அப்படியே வெளியிடப்படாது.  இந்த நடைமுறை மீது பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆட்சேபமும்,  கவலையும் தெரிவிக்கப்பட்டது.  தேர்வில் உண்மையாக பெற்ற மதிப்பெண் மற்ற மாணவர்களின் மதிப்பெண்ணுடன் சமநிலைப்படுத்தும்போது குறைக்கப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில்,  இந்த நடைமுறையை மாற்றும் வகையில்,  ஒவ்வொரு தாளுக்கும் பல்வேறு தவணைகளில் தேர்வு நடத்தப்பட்டதைக் கைவிட்டு,  ஒரு தாளுக்கு ஒரே தவணையில் தேர்வு நடத்த யு.ஜி.சி. முடிவு செய்துள்ளது. இதுகுறித்து யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் கூறியதாவது:

“மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்பு சேர்க்கைக்கான ‘க்யூட்’ தேர்வில் முன்னர் ஒரு தாளுக்கு பல்வேறு நாட்களில் தேர்வு நடத்தப்படும்.  இந்த நடைமுறை தற்போது கைவிடப்பட்டு, ஒ ரு தாளுக்கு ஒரே நாளில் ஒரே தவணையில் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதற்கென தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால்,  மதிப்பெண்கள் சமநிலைப்படுத்த வேண்டிய அவசியமின்றி,  மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அப்படியே வெளியிடப்படும்.  அதுபோல,  பல்கலைக்கழக மற்றும் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு தகுதி பெறுவதற்கும்,  மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்குமான ‘நெட்’ தேர்வு முன்னர் கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்பட்டது. தற்போது ,வரும் ஜூன் 16-ஆம் தேதி நடைபெற உள்ள நெட தேர்வானது நேரடி எழுத்துத் தேர்வு முறைப்படி நடைபெற உள்ளது.  எனவே,  இந்தத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களும் சமநிலைப்படுத்த வேண்டிய அவசியமின்றி,  அப்படியே வெளியிடப்படும்” இவ்வாறு  யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து