Idhayam Matrimony

ஆடி அமாவாசை: தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் புனித நீராடி தர்ப்பணம் செய்த மக்கள்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Tarpanam 2023 07-17

Source: provided

சென்னை : ஆடி அமாவாசையான நேற்று தமிழகம் முழுவதும் ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் குவிந்த மக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். 

தமிழ் மாதங்களில் ஆடி அமாவாசை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் பாவங்கள் நீங்கி, முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. 

அதன்படி ஆடி அமாவாசையான நேற்று தமிழகம்  முழுவதும் நீர்நிலைகளில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். 

தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ப மண்டப படித்துறையில் நேற்றுஅதிகாலை முதலே மக்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு அரிசி, பழங்கள், காய்கறிகள், பூ, வெற்றிலை, பாக்கு வைத்து தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி அருகே உள்ள பிள்ளையார் கோயிலில் தரிசனம் செய்தனர். 

தஞ்சை பெரிய கோயில் புது ஆற்று படித்துறை, வடவாற்று படித்துறை, வெண்ணாற்று படித்துறை, சுவாமிமலை காவிரி படித்துறை, கும்பகோணம் பாலக்கரை காவிரி படித்துறை, மகாமகக்குளம் உள்ளிட்ட காவிரி ஆற்றங்கரைகளிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். 

இதேபோல் கும்பகோணம் பகவத் படித்துறை, டபீர் படித்துறை, திருமஞ்சனம் படித்துறை, கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், திருவாரூர் கமலாலய குளம் ஆகியவற்றில் நேற்று ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர்.

இதேபோல் நாகை, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், காரைக்கால் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வேதாரண்யம், பூம்புகார் கடலிலும் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். 

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கோயில்களிலும்  பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.   கன்னியாகுமரி  திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்களிடம் தங்கள் முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜைகள் செய்தனர்.  

இதேபோல் சென்னை கடற்கரை, கடலூர் சில்வர் பீச், ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை, திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து