முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்: உச்ச நீதிமன்றம்

புதன்கிழமை, 11 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச. 12 - ஓரினச் சேர்க்கை என்பது அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய வகையில் குற்றம்தான் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமல்ல என, கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பில், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377-ன்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர், பரஸ்பரம் விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம், உத்கல் கிறிஸ்தவ கவுன்சில், அபோஸ்தல் தேவாலய கூட்டமைப்பு போன்ற மத அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

 

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஓரினச் சேர்க்கை குற்றம்தான் என உச்ச நீதிமன்றத்தால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

'ஓரினச் சேர்க்கை குற்றம். இந்தக் குற்றத்தில் ஈடுபடுவோர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்க முடியும்' என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

மேலும், சட்டப் பிரிவு 377-ஐ நீக்குவது குறித்து அரசே முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

12 ஆண்டுகளாக நடந்த வழக்கில் இதுவரை:

2001 : ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக போராடும் 'நாஸ்' தன்னார்வ அமைப்பு, ஓரினச் சேர்க்கை சட்டப் பூர்வமானது என அறிவிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடர்கிறது.

2004, செப்டம்பர் 2: டெல்லி உயர் நீதிமன்றம், 'நாஸ்' தன்னார்வ அமைப்பின் பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து மனுவை சீராய்வு செய்யக் கோரப்படுகிறது.

2004, நவம்பர் 3: மறு சீராய்வு மனுவும் தள்ளுபடி ஆகிறது.

2004, டிசம்பர்: டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓரினச் சேர்க்கை செயற்பாட்டாளர்கள் முதன் முறையாக உச்ச நீதிமன்றத்தை அணுகுகிறார்கள்.

2006, ஏப்ரல் 3: ஓரினச் சேர்க்கை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை மனுவை ஏற்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

 

அக்டோபர் 4, பாஜக மூத்த தலைவர் சிங்கால் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக தொடர்ந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.

 

2008, செப்டம்பர் 18, ஓரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்குவது குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்க அரசு கூடுதல் அவகாசம் கோருகிறது.

செப்டம்பர் 25, ஒழுக்கம் என்ற போர்வையில் மத்திய அரசு தங்கள் அடிப்படை உரிமைகளை அத்துமீற முடியாது என ஓரினச் சேர்க்கை செயற்பாட்டாளர்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

செப்டம்பர் 26, இவ்விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகமும், சுகாதாரத் துறை அமைச்சகமும் இரு வேறு நிலைப்பாடுகளை தெரிவித்ததை அடுத்து மத்திய அரசிடம் விளக்கம் கோருகிறது டெல்லி உயர் நீதிமன்றம்.

 

செப்டம்பர் 26, இறுதியாக மத்திய அரசு தன் தரப்பு கருத்தை முன்வைக்கும் போது, ஓரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்குவதால் சமூக அந்தஸ்து குறையும் என்றும், ஓரினச் சேர்க்கை என்பது தவறான புத்தியின் பிரதிபலிப்பு என்றும் தெரிவித்தது.

 

2008 அக்.15, மத்திய அரசின் மத ரீதியான வாதங்களை ஏற்க மறுக்கும் டெல்லி உயர் நீதிமன்றம், ஓரினச் சேர்க்கையை எதிர்ப்பதற்கான மருத்துவ ஆதாரங்களை முன்வைக்குமாறு கோருகிறது

 

2009, ஜூலை 2, ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர், பரஸ்பரம் விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

 

2009, ஜூலை 9, டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜோதிடர் ஒருவர் வழக்கு தொடர்கிறார்.

 

2012 பிப்ரவரி15, இந்த வழக்கின் இறுதி விசாரணை தொடங்குகிறது.

 

2012 மார்ச் 27, விசாரணை முடிந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒத்திவைக்கிறது.

 

2013 டிசம்பர் 11, ஓரினச் சேர்க்கை என்பது அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய வகையில் குற்றம்தான் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்