முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் கொடுக்குமா? இன்று விடை தெரியும்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி,ஜூன்.- 13 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தி.மு.க. எம்.பியும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி மற்றும் கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது இன்று தெரியவரும். ஜாமீன் கோரி இவர்கள் தாக்கல் செய்துள்ள மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சில மாதங்களுக்கு முன் தொலைத் தொடர்பு துறையின் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, அவரது உதவியாளர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது வரை இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக கனிமொழியிடம் விசாரணை நடத்தப்பட்டது. கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரிடமும் விசாரணை நடந்தது. பின்னர் இருவரும் கடந்த மே மாதம் 20 ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இவர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த பிறகு இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதன் பிறகு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் கனிமொழிக்கும், சரத்குமாருக்கும் உள்ள வலிமையான அரசியல் தொடர்புகள் மற்றும் ஜாமீன் கொடுத்தால் அவர்கள் சாட்சியங்களை கலைத்து விடக் கூடும் போன்ற அம்சங்களை பரிசீலித்த டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 8 ம் தேதியன்று இவர்களது ஜாமீன் மனுக்களை நிராகரித்து விட்டது.
என் மகனை நான்தான் கவனிக்க வேண்டும். ஆகவே மனிதாபிமான அடிப்படையில் ஜாமீனில் விடுதலை செய்யுங்கள் என்றும் கனிமொழி கேட்டிருந்தார். ஆனால் அதையும் டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி கனிமொழி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார்.  கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் அப்பீல் செய்திருக்கிறார். இவர்களது ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. விடுமுறை கால நீதிபதிகள் பி.எஸ். சவுகான், சுவாதந்தர் குமார் ஆகியோர் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த மனுவின் மீது விசாரணை நடந்த பிறகு கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது கிடைக்காதா? என்பது தெரியவரும்.  இதிலும் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காவிட்டால் அவருக்கு சிறைவாசம் நீட்டிக்கப்படுவது உறுதியாகி விடும். பின்னர் அவர் வெளியில் வருவது மிக மிக சிரமம்தான். 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை ஆரம்பத்தில் சி.பி.ஐ. மந்தமான முறையில் விசாரித்து வந்தது. பிறகு சுப்ரீம் கோர்ட் குட்டு வைத்த பிறகுதான் இந்த வழக்கில் சூடு பிடித்தது. ராசா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டார்கள். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டே நேரடியாக கண்காணித்து வருகிறது. அப்படிப்பட்ட சுப்ரீம் கோர்ட் கனிமொழிக்கு ஜாமீன் கொடுக்குமா? இந்த சிக்கலான கேள்விக்கு இன்று விடை தெரியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்