முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னா ஹசாரே கைது எதிரொலி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 17 - ஊழலுக்கு எதிராக  வலுவான லோக்பால் மசோதாவை  கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி  காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள இருந்த அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதை  அடுத்து பாராளுமன்றத்தின் இரு   சபைகளும் நேற்று நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டன. ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரம்பிற்குள்  பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு  தலைமை நீதிபதி ஆகியோரையும் சேர்க்க  வேண்டும் என்று பிரபல சமூக  சேவகர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். ஆனால் இந்த  மசோதாவில் பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு  தலைமை நீதிபதி ஆகியோரை  சேர்க்காமலேயே இந்த  மசோதா பாராளுமன்றத்தில்  தாக்கல்  செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று அன்னா ஹசாரே கோரி வருகிறார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று டெல்லியில் அவர்  தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்றார். ஆனால் அவரை போலீசார்  கைது  செய்துள்ளனர்.
இந்த கைது  நடவடிக்கை  தொடர்பாக பாராளுமன்றத்தின் லோக்சபையில் நேற்று காலை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்சினை கிளப்பின. இதை அடுத்து சபையில் அமளி ஏற்படவே சபையை 11.30 மணி வரை சபாநாயகர்  மீராகுமார் ஒத்திவைத்தார்.
பிறகு சபை மீண்டும் கூடிய போதும் இதே பிரச்சினையை எதிர்க்கட்சிகள் கிளப்பின.
இதனால் சபையில் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதை அடுத்து சபை நேற்று நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதே போல ராஜ்ய சபையிலும் நேற்று கேள்வி நேரத்தின்போது அன்னா ஹசாரே கைது குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சினை கிளப்பின. இதனால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. கேள்வி நேரத்தை நடத்த முடியாத  நிலையில் சபையை நண்பகல்  12 மணி வரை  சபையின்  தலைவர்  ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார்.
அதன் பிறகு 12 மணிக்கு மீண்டும் சபை கூடியபோதும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதே  பிரச்சினையை முன்வைத்து அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இதனை  தொடர்ந்து ராஜ்ய  சபையும் நேற்று நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்