முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் குவிந்த பக்தர்கள்: மழையில் நனைந்தபடி தரிசனம்

திங்கட்கிழமை, 18 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, ஆக.19 - கடந்த 4 நாட்களாக கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நேற்று முன் தினம் திருப்பதியில் 2 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால் தங்கும் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் மழையில் நனைந்தபடி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிரம்மோற்சவம், புத்தாண்டு, அரசு விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். சுதந்திர தினத்தைத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை தினம் என்பதால் கடந்த 14ம் தேதி மாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வரத் தொடங்கினர்.

நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி, இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் உள்ள 31 அறைகள் நிரம்பி 5 கிமீ தூரம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இலவச தரிசன பகுதியில் காத்திருந்த பக்தர்கள், 36 மணி நேர காத்திருப்புக்குப் பின்னர் ஏழுமலையானை தரிசித்தனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் 23 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கினர். சிறப்பு தரிசன டிக்கெட் பெற பழைய அன்னதான கூடம் வரை பக்தர்கள் காத்திருந்ததால் காலை 10 மணி வரை ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு நிறுத்தப்பட்டது. அவர்கள் தரிசனத்துக்கு 7 மணி நேரம் ஆனது.

பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க தங்கும் அறைகள் கிடைக்காமல் அவதிக்கு ஆளாகினர். அறைகளில் தங்கியவர்கள் அறைகளை காலி செய்யாததால் புதிதாக பக்தர்களுக்கு அறைகள் வழங்குவதை தேவஸ்தானம் நிர்வாகம் நிறுத்தி விட்டது. இதனால், ஏராளமான பக்தர்கள் அறைகள் கிடைக்காமல் மரங்களுக்கு அடியிலும், கட்டிடங்களுக்கு வெளியிலும் காத்திருந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியிலிருந்து 2 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால் அறையில்லாமல் வெளியே தங்கியிருந்த பக்தர்கள் மழையில் நனைந்தபடி சுவாமி தரிசனத்துக்கு சென்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் பக்தர்கள் ஏராளமான பணம், நகைகளை காணிக்கையாக அளிக்கின்றனர். இந்தப் பொருட்கள் தினமும் எண்ணப்படுகிறது. தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் அனைத்தும் வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால் உண்டியலில் சேரும் சில்லரை நாணயம் மட்டும் தேவஸ்தான கருவூலத்தில் தேங்கி கிடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் உண்டியல் மூலம் கிடைத்த சில்லரை நாணயம் 150 டன் சேர்ந்து உள்ளது. இதில் 50 டன் வெளிநாட்டு நாணயமாகும். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 கோடி.

இந்த நாணயங்களை வங்கியும் எடுக்கவில்லை. மேலும் ஏலமும் போகவில்லை. இதனால் சில்லரை நாணயம் தேக்கம் அடைந்து வருகிறது. இவைகளை உடனடியாக உபயோகிக்காவிட்டால் செல்லாத காசாகிவிடும் என தேவஸ்தானம் கருதுகிறது. தற்போது இருப்பில் உள்ள 100 டன் இந்திய நாணயத்தில் 10 டன் 25 காசு, 50 காசு நாணயமாக உள்ளது. இது செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்து விட்டதால் உபயோகமில்லாமல் கிடக்கிறது. அதோடு நாணய குவியலுக்கு பாதுகாப்பு அளிக்கவும், தேவஸ்தான நிர்வாகம் சிரமப்படுகிறது. எனவே விரைவில் இந்த நாணயங்களை ஏலம் விட்டு அப்புறப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்