முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய பத்திரிகையாளர் தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள "தேசிய பத்திரிகை தின" வாழ்த்துச் செய்தி வருமாறு:-

ஜனநாயகத்தை கட்டிக் காப்பதில் முக்கிய பங்காற்றிடும் பத்திரிகை மற்றும் காட்சி ஊடகத் துறையின் பணிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் நாள் தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில், அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றிடும் நண்பர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிகையாளர் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு, பத்திரிகையாளர் ஓய்வூதியத்தை 8,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும், பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியத்தை 4,750 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது. பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்கொடையின் உச்சவரம்பு மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்புகளை 2 லட்சம் ரூபாயிலிருந்து, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தியது.

பணிக்காலத்தில் கடுமையான நோயினால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகையாளர் நல நிதியம் மூலம் வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சைக்கான நிதியுதவியை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் குறைந்த வாடகையில் வீடுகளை ஒதுக்கீடு செய்தது.

மாவட்டங்களில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் பணிபுரிபவர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவது. டில்லியில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சார்ந்த பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகையாளர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், குடும்ப உதவி நிதி, பத்திரிகையாளர் நல நிதியம் உட்பட அனைத்து நலத்திட்டங்களையும் விரிவுபடுத்தியது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை பத்திரிகையாளர்களின் நல்வாழ்விற்காக செம்மையான முறையில் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்திட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியினை ஆற்றிவரும் பத்திரிகைகள் மற்றும் காட்சி ஊடகங்களை இந்த சிறப்பான நாளில் பாராட்டி, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது தேசிய பத்திரிகை தின வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து