முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாக்., கிரிக்கெட் போட்டி: ராஜ் தாக்கரே எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

மும்பை, செப். 14 - இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்தும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் பாகிஸ்தான் அணியை கிரிக்கெட் விளையாட அனுமதிக்கமாட்டோம் என்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பு தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவு முறிந்தது. மேலும் பாகிஸ்தானில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக மற்ற சர்வதேச கிரிக்கெட் அணிகளும், அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடும் நிதி நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியாவுடனான கிரிக்கெட் உறவை புதுப்பிக்க முயன்றது. இதன் பயனாக இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்பு கொண்டுள்ளன. வரும் டிசம்பர் மாதம் இரு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா தலைவர் பால்தாக்கரே, மகாராஷ்டிராவிற்குள் பாகிஸ்தான் அணி கிரிக்கெட் விளையாட அமைதிக்கமாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.

அவரது கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பு தலைவர் ராஜ் தாக்கரே, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை மகாராஷ்டிராவில் விளையாட அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக மும்பையில் நடைபெறும் சர்-சேத்ரா என்ற பாரம்பரிய சங்கீத இசை நிகழ்ச்சியில் பங்கேற்க 8 பாகிஸ்தான் இசை கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் பால்தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிற்கு வரும் டிசம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் அணி பங்கேற்க உள்ள கிரிக்கெட் போட்டிகளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த போட்டியும் நடைபெற திட்டமிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பால் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோரின் அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்