Idhayam Matrimony

வயநாடு நிலச்சரிவில் உயிர் பிழைத்தோரை தேடும் பணியில் ரோடார் ட்ரோன் : இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை துல்லியமாக கண்டறியுமாம்

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2024      இந்தியா
Wayanad1  -2024-07-30

வயநாடு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 338 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் உயிர் பிழைத்தோர் இடிபாடுகளுக்குள் எங்கேனும் சிக்கியிருக்கிறார்களா, புதையுண்டுள்ளனரா என்பதை ட்ரோன்களில் ரேடார் கருவியைப் பொருத்தி துல்லியமாக கண்டறிய முடியுமாம். அதன் மூலம் இன்று முதல் தேடுதல் பணியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

மண்ணில் புதைந்தன...

முன்னதாக, பெருமழை காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகள் இருந்த தடயமே தெரியாத அளவுக்கு அப்பகுதி முழுவதும் சேற்று மண்ணால் மூடப்பட்டுள்ளது.

4-வது நாளாக மீட்பு...

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக மீட்பு பணி முழு வீச்சில் நடைபெற்றது. இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழு, கடலோர காவற்படை, இந்திய கடற்படை வீரர்கள் இணைந்து கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு குழுவிலும் உள்ளூர்வாசிகள் மூவர், வனத்துறை ஊழியர் ஒருவரும் இணைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 338 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாலியாற்றில் மட்டும் 172 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 298 பேரை காணவில்லை என்ற புகார்கள் பதிவாகியுள்ளன. 

ட்ரோன் ரேடார்கள்...

சாலியாற்றுப் பகுதியில் சடலங்களைத் தேடுதல் பணிகள் தொடர்கிறது. இதற்கிடையில் நிலச்சரிவு பகுதிகளில் இன்னும் யாரேனும் பொதுமக்கள் உயிருடன் சிக்கியிருக்கிறார்கள என்பதை ட்ரோன்களில் ரேடார் கருவியைப் பொருத்தி அதன் மூலம் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. நிலச்சரிவால் இடிந்து விழுந்த கட்டிடங்கள் மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கும் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் மீட்புப் பணியில் ட்ரோன் அடிப்படையிலான ரேடார் இன்ற முதல் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த ட்ரோன் ரேடார்கள் இந்த பணியை துல்லியமாக செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவால் மண்ணில் புதைந்துள்ள உடல்களை கண்டறிவதற்காக டெல்லியில் இருந்து ட்ரோன் அடிப்படையிலான ரேடார் இன்று (சனிக்கிழமை) வரும் என்று மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே ராஜன் தெரிவித்தார்.

வெற்றிகரமான....

இந்த ட்ரோன்கள் நிலப்பரப்பில் செல்லவும், மனிதர்கள் செல்ல முடியாத மிகவும் ஆபத்தான பகுதிகளை அணுக மற்றும் பாதுகாப்பான தேடல் நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படுகிறது. கூடுதலாக, ட்ரோன்கள் குறுகிய காலத்தில் உயிர் பிழைத்தவர்களைக் கண்டறிவதன் செயல்திறனை கணிசமாக அதிகரிக்கிறது. தெர்மல் இமேஜிங் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்ட, ட்ரோன்கள், இடிபாடுகளில் சிக்கி அல்லது இருளில் மறைந்திருக்கும் நபர்களால் வெளியிடப்படும் வெப்ப அலைகளை கண்டறிந்து, வெற்றிகரமான மீட்புப் பணிக்கு உதவுகிறது.

கூட்டுக்குழுவாக... 

வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள் குறித்து கேரள சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி அஜித் குமார் அளித்த ஊடகப் பேட்டியில், “4 நாட்களாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராணுவம், என்டிஆர்எஃப், உள்ளூர் போலீஸ், சிறப்புக் குழுக்கள், தீயணைப்புத் துறை, கடலோர காவற்படை, கடற்படை என கூட்டுக்குழுவாக இணைந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 200க்கும் அதிகமான உடல்களையும், உடல் பாகங்களையும் மீட்டுள்ளோம். வருவாய்த் துறையினர் இப்பகுதியில் எத்தனை பேர் வசித்துவந்தனர். எத்தனை பேரை இப்போது காணவில்லை போன்ற தகவல்கள் தெரியவரும்” என்றார். 

கனமழை பெய்யும்...

இதற்கிடையில் இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு நாட்கள் வயநாடு மற்றும் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. இடுக்கி, திரிசூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயிருடன் மீட்பு...

இதற்கிடையே வயநாடு நிலச்சரிவில் சிக்கிய ஒரேகுடும்பத்தை சேர்ந்த 4 பேர் 4 நாட்களுக்குபின் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பவம் நடந்துள்ளது. சூரல்மலையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் படவெட்டிகன்னு. இந்த கிராமமும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஜானி தனது குடும்பத்துடன் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டார். நிலச்சரிவு ஏற்பட்டபோது அவர் குடும்பத்துடன் மலை உச்சிக்கு சென்று தப்பியிருக்கலாம் என தகவல் வெளியான நிலையில் ஜானி தனது குடும்பத்துடன் வீட்டிலேயே இருந்துள்ளார். தற்போது 4 நாட்கள் கழித்து ஜானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

சிறுமிக்கு சிகிச்சை...

ஜானி குடும்பத்தில் 2 ஆண்கள், பெண், சிறுமி மொத்தம் 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் சிறுமிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மீட்கப்பட்ட அனைவரும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, காயமடைந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட 4 பேரும் கடந்த 4 நாட்களாக தங்கள் வீட்டிலேயே இருந்துள்ளனர். நிலச்சரிவில் ஜெனரேட்டர் பாதிக்கப்படாததால் 4 நாட்களும் ஜானி வீட்டில் மின் இணைப்பு இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து