முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவால் நல்லாட்சி தரமுடியும்: கருத்துக்கணிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.19 - லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழக அரசின் திட்டங்களுக்கு பெருவாரியான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பானவை என்றும், ஜெயலலிதாவால் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தர முடியும் என்ற நம்பிக்கையையும் மக்கள் தெரிவித்துள்ளனர். தி.மு.க.வின் தோல்விக்கு குடும்ப ஆட்சி, லஞ்ச ஊழல், மின்வெட்டு பிரதான காரணங்களாக தெரிவித்துள்ளனர். லயோலா கல்லூரி மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் மேற்கண்ட தகவல்களை பொதுமக்கள் அளித்துள்ளனர்.

இது பற்றி விபரம் வருமாறு:-

சென்னை லயோலா கல்லூரியின் பேராசியர் டாக்டர் சா.ராஜநாயகம் ``மக்கள் ஆய்வகம்'' என்ற ஆய்வில் மிகுத்த பிரபலம் அடைந்தவர். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தமிழகத்தில் பேராசிரியர் ராஜாநாயகத்தின் கருத்துக்கணிப்பு முடிவை பொதுமக்கள் ஆவலோடு எதிர்ப்பார்ப்பது வழக்கம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி ஜெயிக்கும் என்று பேராசிரியர் ராஜநாயகத்தின் கள ஆய்வு தெரிவித்தது ஆனால் தேர்தலில் தில்லு முல்லு செய்து அதை கடந்த ஆட்சியாளர்கள் மாற்றினர். அதன் பின்பு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் பேராசிரியர் ராஜநாயகத்தின் குழு தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து ஒரு கள ஆய்வு மேற்கொண்டு பெரிய கருத்துக்கணிப்பை எடுத்தது என்றும் அதில் 85 சதவிகிதம் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற வாய்ப்பு உண்டு என்று இருந்ததாகவும் கூறப்பட்டது. அதன்படி அ.தி.மு.க. அணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று கூறப்பட்டது.

அந்த ஆய்வு கருத்துக்கணிப்பை வெளியிட கூடாது என்று அப்போது தி.மு.க. அரசு பேராசிரியர் ராசநாயகத்தை மிரட்டியதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் அந்த கருத்துக்கணிப்பு முடிவு என்று கூறப்பட்டது போல் அ.தி.மு.க. கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வென்றது.

தற்போது பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வகம் குழு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அனைவரிடமும் தமிழக அரசின் மக்கள் நல திட்டங்கள், தமிழக அரசின் செயல்பாடு, தமிழக அமைச்சர்களின் செயல்பாடு, இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம். அ.தி.மு.க.வின் வெற்றிக்கான காரணங்கள் தி.மு.க. காங்கிரஸ் தோல்விக்கான காரணங்கள் தே.மு.தி.க.வின் வெற்றிக்கான காரணம் தமிழகம் தலைமை செயலகம் இடமாற்றம் உட்பட ஏராளமானதலைப்புகளை பொதுமக்கள் கருத்துக்கு விட்டு அவர்களது முடிவுகளை சேகரித்து வெளியிட்டுள்ளனர்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தது தே.மு.தி.க.வின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று பொதுமக்கள் கணிசமானோர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் கேபிள் டி.வியை அரசுடமையாக்கியதை 91.3 சதவிகிதத்தினர் ஆதரித்துள்ளனர்.

பேராசியர் ராஜநாயகத்தின் கருத்து கணிப்பு விபரங்கள் வருமாறு:-

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மே.21 முதல் 29 வரையும், புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் முடிந்துள்ள நிலையில், ஜூன்11 முதல் 15 வரையும், அ.தி.மு.க. ஆட்சியின் தேனிலவுக் காலச் செயல்பாடுகளைக் குறித்த மக்களின் கருத்துப்போக்குகளை ஆராய, பேரா.டாக்டர் ச.ராஜநாயகத்தின் நேரடி வழிநடத்துதலில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 3132 பேரைச் சந்தித்துக் கருத்துக்கள் சேகரிக்கப்ட்டன (தனிப்பட்ட கலைந்துரையாடலில் 2231 பேர், வீடியோ பதிவில் 900 பேர்). மீனவர் பிரச்சனைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஏறத்தாழ 21 விழுக்காடு (650 பேர்) கடற்கரையோரப் பகுதிகலைச் சேர்ந்தவர்கள் சந்திக்கப்பட்டனர். ஏறத்தாழச் சம அளவில் ஆண்களும் பெண்களும் கள ஆய்வில் பங்கேற்றனர்.

கள ஆய்வில் பங்கேற்றோரில் வயதிரீதியாக, வயது 18-க்கும் மேல் 20 வயது வரை 3.5, வயது 21 முதல் 30 வரை 27.4, வயது 31 முதல் 45 வரை 39.4, வயது 46 முதல் 60 வரை 25.4, மீதி வயது 61-க்கு மேல். கல்வியைப் பொருத்த மட்டில் பெரும்பாலோர் (57.9) வகுப்பு 6 முதல் 12 ரவை படித்துல்லவர்கள். மற்றவர்களில், உயர்கல்வி 19.7, வகுப்பு 5 வரை 13.6, 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அணி வெற்றி பெறும் என்பது தாங்கள் எதிர்பார்த்தே என மிகப்பெரும்பாலோர் (74.8) தெரிவித்தாலும், அவர்களில் கணிசமானோர் (21.1) இந்த அளவுக்கு மாபெரும் வெற்றியாக அமையுமென எதிர்பார்க்கவில்லை எனக் கூறுகின்றனர்.

அ.தி.மு.க. அணியின் வெற்றி:- அ.தி.மு.க அணியின் மகத்தான வெற்றிக்குக் காரணங்களாக மக்கள் சொல்லியுள்ளவற்றில் முதல் ஐந்து ஆட்சி மாற்றம் வேண்டி (44.2), தி.மு.க. தலைமையின் குடும்ப ஆட்சி (32.1), விலைவாசி உயர்வு (28.7), மின்வெட்டு (25.8), அரசுத்துறைகளில் லஞ்சம் ஊழல் (22.9).

தே.மு.தி.க.வின் வெற்றி:- அ.தி.மு.க. அணியில் தலையாய அங்கமாகிய தே.மு.தி.க.வைப் பொருத்தவரையில் அக்கட்சியின் வெற்றிக்கான முக்கிய காரணமாக அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தது பெரும்பாலோரால் (52.8) குறிப்பிடப்படுகிறது.

தி.மு.க.அணியின் தோல்வி:- தி.மு.க. அணியைப் பொருத்தவரை, அதன் படுதோல்விக்குக் காரணங்களாக மக்கள் முன் வைத்துள்ளவற்றில் முதல் ஐந்து தி.முக. தலைமையின் குடும்ப ஆட்சி (49.7), அரசுத் துறைகளில் லஞ்சம் ஊழல் (42.9), 2 ஜி ஸ்பெக்ட்ராம் முறைகேடு (31.5), மின்வெட்டு (27.8), விலைவாசி உயர்வு (20.7).

காங்கிரஸசின் தோல்வி:- தி.மு.க. அணியில் மிகப்பெரிய அங்கமாகிய காங்கிரசைப் பொருத்த வரையில், ஈழத்தமிழர் பிரச்சினையில் அக்கட்சி போட்டுவரும் இரட்டை வேடம் அதன் படுதோல்விக்கு மிக முக்கிய காரணமாக மிகப் பெரும்பாலோரால் (61.5) முன்வைக்கப்படுகிறது. அடுத்து இடம் பெரும் முக்கிய காரணங்கள், உள்கட்சிப் பிரிச்சனை 20.3, தி.மு.க.வுடன் கூட்டணி 11.7. 

தி.மு.க. - காங்கிரஸ் உறவு:- தற்போதைய அரசியல் சூழலில் தி.மு.க., காங்கிரஸ் உறவு தொடருமா என்பது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களில் சந்தேகத் தொனியே தூக்கலாக வெளிப்படுகிறது.

இனி உறவு தொடர வாய்ப்பில்லை. விரைவிலேயே உறவு முறிந்துவிடும் 36.7, பெயரளவில் உறவு தொடர்வதாகச் சொன்னாலும் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது உண்மை 23.3

அ.தி.மு.க. ஆட்சியின் ``தேனிலவு''  

(ஆட்சிப்பொறுப்பேற்றது தொடங்கி, முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடியும் வரை)

தலைமைச் செயலகத்திற்கான புதிய கட்டிடம்:- கைவிடும் முடிவு:- தலைமைச் செயலகத்திற்கான புதிய கட்டிடத்தைக் கைவிட எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்பை விட இருமடங்கிற்கும் மேலான ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவு 66.1, (இது அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலேயே சொல்லப்பட்ட விஷயம் தான் 29.3, புதிய கட்டிடத்தில் தமிழ்பண்பாடு, அழகியல் அம்சங்கள் இல்லை 17.3, மிக நெரிசலான இடத்தில் அமைந்துள்ளது 11.0, கட்டிட வேலை முடியவில்லை 8.5).

விசாணைக்கு குழு:- தலைமைச் செயலகத்திற்கான புதிய கட்டிடம் கட்டுவதில் முறைகேடுகள் நடந்துள்ளாதக் கருதி, விசாரணைக் குழு அமைக்க முடிவு செய்துள்ளது சரியானதெனப் பாதிப்பேர் (49.2) வரவேற்றாலும்,

அண்ணா பல்கலைக் கழகம்;- அண்ணா பல்கலைக் கழகங்களை மீண்டும் ஒரே பல்கலைக்கழகமாக மாற்றும் அ.தி.மு.க. அரசின் முடிவுக்குப் பெரும்பான்மை ஆதரவு இருந்தாலும், மிகக் கணிசமான அளவினருக்கு (29.5) இது குறித்துக் கருத்துரைக்கும் அளவுக்கு ஆர்வமில்லை என்பது கவனத்திற்குரியது.

ஆதரவு:- 46.3 (இதனால் திறமையான நிர்வாகம்-தரக் கட்டுப்பாடு சாத்தியமாகும் 73.5, தரமற்ற கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது தடுக்கப்படும் 8.8).

பெண்களுக்குத் திருமண உதவித்தொகை அதிகரிப்பு மற்றும் தாலிக்குத் தங்கம் தரும் திட்டத்திற்கு ஏகோபித்த வரவேற்பு (80.3) உள்ளது. எனினும் இவர்களில் நிபந்தனையற்ற வரவேற்பு வழங்குவோர் 39.4 மட்டுமே. ஏனையோர் (40.9) படித்த பெண்கள் படிக்காத பெண்கள் என்று பாகுபடுத்தாமல் எல்லோருக்கும் ஒரே மாதிரி உதவி செய்யவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர்.

ஏற்கனவே கல்லூரியில் படிக்கிற அளவு வசதியுள்ள பெண்களுக்கு இந்த உதவி அவசியமற்றது என்ற கருத்தையும் பத்தில் ஒருவர் (10.0) தெரிவிக்கின்றனர். இந்த திட்டத்தை வெகு சிலரே (6.5) வீண் செலவாகக் கருதுகின்றனர்.

முதியோர் உதவித்தொகை:- முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு மற்றும் வங்கி வழியாகப் பட்டுவாடா செய்யும் திட்டத்திற்கு அபரிமிதமான வரவேற்பு (85.8) உள்ளது (எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு 67.9, வங்கி மூலம் பட்டுவாடா செய்யும்போது அப்பாவி கிராம மக்களை வங்கி ஊழியர்கள் அலைக்கழிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் 17.9).

முதலியோர் உதவித்தொகைக்குப் பதில், பெற்றோரைப் பிள்ளைகள் காப்பாற்றாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டத்தைத் தீவிரமாக அமுல்படுத்த வேண்டும் (6.7), 

மிக்ஸி, கிரைண்டர், விசிறி இலவசமாய் வழங்கும் திட்டத்திற்குப் பரவலான ஆதரவு (54.4) தெரிவித்துள்ளனர். இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் ஆதரவு  (67.5) வெளிப்படுகிறது (நிபந்தனையற்ற வரவேற்பு 57.9, ரேஷன் ஊழியர்கள் தில்லு முல்லு செய்ய வாய்ப்புள்ளதால் அவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் வரவேற் 9.6).

பிளஸ் டூ தொடங்கி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கும் திட்டத்திற்குப் பெருவாரியான வரவேற்பு (84.7) உள்ளது. அரசு பள்ளியில், கல்லூரியில் படிக்கின்ற ஏழை மாணவருக்கு மட்டும் தரலாம் என்ற கருத்து முதன்மையிடம் (39.8) பெறுகிறது. நிபந்தனை ஏதுமின்றி அப்படியே அமுல்படுத்தலாம் என்ற கருத்தும் ஏறத்தாழச் சம வலுவுடன் (38.2) வெளிப்படுகிறது.

கைவிடப்படும் கான்கிரீட் வீடு திட்டம்:- தி.மு.க. அரசின் கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் முறையாகக் கலந்தாலோசித்து உருவாக்கப்படவில்லை என்பதால் அதைக் கைவிட நான்கில் ஒருவரது (24.3) ஆதரவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்ததாக (சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவது உள்பட) இருப்பதால் புதிய திட்டத்திற்கு பத்தில் ஒருவரது ஆதரவும் (9.8) உள்ளன.

எனினும், இந்த விஷயத்தில் அவசரப்படாமல், தீர ஆராய்ந்து புதிய திட்டத்தை வடிவமைக்க வேண்டும் என்பதே பெரும்பான்மைக் கருத்தாக (43.7) வெளிப்படுகிறது.

இலவச டி.வி. திட்டம் ரத்து:- இலவச டி.வி. திட்டத்தை ரத்து செய்து, மீதமுள்ள ஒன்றேகால் லட்சத்திற்கும் மேற்பட்ட பெட்டிகளை அநாதை இல்லங்கள் முதலிய பொது, தொண்டு அமைப்புகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது சரியானதென மூன்றில் ஒருவர் (34.2) வரவேற்புத் தெரிவிக்கின்றனர்.

கேபிள் டி.வி. அரசுடைமை:- கேபிள் டி.வி.யை அரசுடைமை ஆக்கும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த உச்சபட்ச வரவேற்பு (91.3) உள்ளது (குறைந்த கட்டணத்தில் அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்குவது 41.0, வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாய் வழங்குவது 50.3).

மேலவை ஒழிப்பு:- சரியான முடிவு 46.7:- (அரசுக்குச் செலவு மிச்ம் 24.6, எம்.எல்.ஏ.க்களுக்குப் போட்டியாக எம்.எல்.சி.க்கள் அரசியில் அதிகாரம் செய்வது நிற்கும் 17.5, நேரடியாகத் தேரந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இருக்கையில் இப்படியொரு அமைப்புக்கு கொள்கை அளவிலான தேவையில்லை 4.6)

புதிய அமைச்சரவையின் செயல்திறன்:- அ.தி.மு.க. அமைச்சரவையின் செயல்திறனுக்குப் பரவலான பாராட்டு (72.9) கிடைத்துள்ளது (அமைச்சர்களின் செயல்பாடுகள் இதுவரை மிகச் சிறப்பாக அமைந்துள்ளன, இனிமேலும் நன்றாகச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது 37.1, இது வரை பரவாயில்லை, ஆனால் நிறைய புதுமுகங்கள் இருப்பதால், இவர்களின் திறமை என்ன என்பது போகப் போகத்தான் தெரியும் 35.8).

ஒன்றரை ஆண்டு காலக்கெடு:- முதல்வர் சொல்லியுள்ளது போல, அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றிவிட முடியுமா என்ற கேள்விக்கு, ஜெயலலிதா மனது வைத்தால் நிச்சயம் முடியும் என்ற பதில் முதலிடம் பெறுகிறது(54.5).

தமிழக மீனவர் பிரச்சனை:- கச்சத் தீவை மீட்கக் கோரும் தீர்மானம், கச்சத் தீவை மீட்கக்கோரும் வழக்கில் தமிழக அரசும் இணைந்துகொள்ளச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பெரும்பாலோர் (62.9) வரவேற்றுள்ளனர்.

நிரந்தரத் தீர்வு:- தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாகப் பெரும்பாலோர் முன்வைப்பது கச்சத் தீவை மீட்பதாகும். கச்சத் தீவை மீட்பது 45.8.

ஐ.நா அறிக்கையை முன்வைத்த தீர்மானம்:- இலங்கைப் பிரச்சினையில் ஐ.நா. அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசு மீதி நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்திச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஏகோபித்த வரவேற்பு (81.5) உள்ளது (இது சரியான நேரத்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் 58.8, இந்த தீர்மானத்தில் போர்க்குற்றவாளியாக ராஜபக்சே பெயரையும், நடந்தது இனப் படுகொலை என்பதையும் மழுப்பாமல் நேரடியாகக் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் 22.7).

தமிழகம் மேற்கொண்டு செய்ய வேண்டியது:- இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக, அரசியல் கட்சிகள் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்கு நான்கில் மூவர் (74.2) முன்வைக்கும் பதில், மத்திய அரசுக்கு காலக்கெடு விதித்து, அதற்குள் நிறைவேற்றாவிட்டால் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதாகும்.

மத்திய அரசு மேற்கொண்டு செய்ய வேண்டியது:- இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாகத் தமிழகச் சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தைத் தொடர்ந்து மத்திய அரசு உடனடியாக என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்குப் பதிவாகியுள்ள முதல் ஐந்த பதில்கள்:-

வரப்போகும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்துத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் 69.8.

இலங்கை அரசின்மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் 42.3.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஐ.நா. அவையில் இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் 40.5.

போரில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லவும் சொத்துக்களைத் திரும்பப் பெறவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் 30.5.

இலங்கையுடனான தூதரக உறவை முறிக்க வேண்டும் 12.1.

நிரந்தரத்தீர்வு:- இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு, தனி ஈழம் என்பது பெரும்பான்மைக் கருத்தாக வெளிப்படுகிறது. 

தனி ஈழம் 64.9.

பேச்சு வார்த்தை மூலம் சிங்களருக்கு நிகரான சம உரிமைகளைப் பெறுவது 17.2. 

ஒருங்கிணைந்த இலங்கையில் சட்டத்திருத்தம் மூலம் தமிழருக்குத் தன்னாட்சி 14.4.

தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள்:- தற்போது தமிழகம் சந்திக்கும் முக்கியப் பிரச்சினைகளாக மக்கள் முன்வைப்பதில் முதல் ஐந்து இடங்களில் வருபவை, மின்வெட்டு (76.0), விலைவாசி உயர்வு (71.2), அரசுத் துறைகளில் லஞ்சம் ஊழல் (16.4), வேலைவாய்ப்பின்மை (15.1), சட்டம் ஒழுங்குச் சீர்குலைவு (12.8).

அ.தி.மு.க. அரசின் தீர்வு:- தாங்கள் முக்கியமானவையாகக் கருதும் பிரச்சினைகளைப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க. அரசால் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை பரவலாக பொதுமக்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்களை போராசிரியர் ராஜநாயம் மக்களிடத்தில் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் அ.தி.மு.க. அரசை பற்றிய தங்களுடைய நம்பிக்கையை பொதுமக்கள் பெருவாரியாக பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்