முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாண்டலின் சீனிவாசன் உடல் தகனம்

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 21 – மாண்டலின் இசைக்கருவியில் கர்நாடக இசையை மீட்டி சாதனை படைத்தவர் மாண்டலின் சீனிவாசன் (45). பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் பெற்று பிரபல இசைக் கலைஞராக விளங்கிய மாண்டலின் சீனிவாசன், கல்லீரலில் ஏற்பட்ட நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார். நோயின் தாக்கம் அதிகமானதால் கடந்த 3–ந் தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி அனுதாபம் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், பிரபல பாடகி லதாமங்கேஷ்கர், இசைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த மாண்டலின் சீனிவாசன் உடலுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் கு.க.செல்வம், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா உள்பட பலர் உடன் சென்றனர்.

இசை அமைப்பாளர்கள் இளையராஜா, தேவிஸ்ரீபிரசாத், எஸ்.ஏ. ராஜ்குமார், பாடகர்கள் மனோ, நரேஷ் அய்யர், இசை கலை பல்கலைக்கழக துணை வேந்தர் வீணை காயத்ரி, ஷோபாசந்திரசேகர், டிரம்ஸ் சிவமணி, கர்நாடக நடிகை பாவனா மற்றும் இசை கலைஞர்கள், திரை உலக பிரமுகர்கள் ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மாண்டலின் சீனிவாசன் உடல்,நேற்று மாலை வடபழனி தனலட்சுமி நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு இறுதிச் சடங்கு நடந்தது. அதன் பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்