முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்கியதற்கு எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.22 - டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"பெட்ரோலிய பொருள்களின் விலைகளை மத்திய அரசு தீர்மானித்து வந்தது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்கி, பெட்ரோல் உற்பத்தி செய்யும் கம்பெனிகளே விலைகளைத் தீர்மானிக்கும் உரிமையை அளித்தது.

தற்போது டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்கி, டீசல் உற்பத்தி செய்யும் கம்பெனிகளே விலையைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததையொட்டி, டீசல் விலை சிறிது குறைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம் அதை காரணம் காட்டி, உள்நாட்டில் டீசல் விலையை உற்பத்தி செய்யும் கம்பெனிகள் உயர்த்திட இந்த முடிவு வழிவகுக்கும். இது தனியார் கம்பெனிகள் உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கவே பயன்படும். மேலும், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயரும். மத்திய அரசின் மேற்கொண்ட முடிவு சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.

டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்கியதை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்த முடிவைக் கைவிட வேண்டும் " இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்