முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜே.டே கொலை: குற்றவாளிகள் மீது கடுமையான சட்டத்தின்கீழ் வழக்கு

சனிக்கிழமை, 9 ஜூலை 2011      இந்தியா

மும்பை, ஜூலை - 9 - பத்திரிகையாளர் ஜே. டே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 8 குற்றவாளிகள் மீதும் மகாராஷ்ட்ர கூட்டுச் சதி குற்றத்தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து வெளிவரும் மிட்டே என்ற ஆங்கில பத்திரிகையின் புலனாய்வு நிருபரான ஜோதிர்மாய் டே கடந்த ஜூன் மாதம் 11 ம் தேதி அவரது வீட்டிற்கு அருகிலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படுகொலை வழக்கில் சத்தீஷ் காலியா உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது. சோட்டா ராஜனின் கட்டளைப்படிதான் இவர்கள் 8 பேரும் கூட்டாக சேர்ந்து இந்த படுகொலையை செய்திருப்பதாக போலீசார் தீர்மானித்துள்ளனர். அதனால்  இவர்கள் மீது மகாராஷ்ட்ர கூட்டுச்சதி குற்றத் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்தனர்.
ஜோதிர்மயி டே கொலை வழக்கில் வினோத் அன்சாரி என்கிற வினோத் செம்பூர் கடந்த 3 ம் தேதிதான் கைது செய்யப்பட்டான். டேவைக் கொல்ல இவன்தான் ரூ. 5 லட்சம் பணம் கொடுத்துள்ளான். டேவை அடையாளம் காட்டியவனும் இவன்தான். இவனது போலீஸ் காவல் வருகிற 13 ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிழல் உலக தாதா சோட்டாராஜன் கும்பலைப் பற்றிய தகவல்களை அவனது எதிரியான இன்னொரு நிழல் உலக தாதா சோட்டா ஷகீலுக்கு பத்திரிகையாளர் டேதான் கொடுத்துள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் டேவை ஒழித்துக்கட்ட சோட்டா ராஜன் கொலையாளி சதீஷ் காலியாவுக்கு கட்டளையிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை போலீசார் ஏற்கவில்லை. இருந்தாலும் இந்த காரணம் உண்மையா என்பது குறித்து போலீசார் மேலும் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்