முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூத்த காங்கிரஸ் தலைவர் ரீடா பகுகுணா பா.ஜ.க.வில் இணைந்தார்

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, மூத்த காங்கிரஸ் தலைவர் ரீடா பகுகுணா ஜோஷி அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவர் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் அவர் இணைந்தார். இந்திய ராணுவத்தின் எல்லை கடந்த தாக்குதலை விமர்ச்சித்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

உத்திரபிரதேச  காங்கிரஸ் தலைவர்  ரீடா பகுகுணா அந்த கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.கவில் நேற்று இணைந்தார். ரீடா பகுகுணாவின் சகோதரரும், உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வருமான விஜய் பகுகுணா ஏற்கனவே பா.ஜ.கவில் உள்ளார். கடந்த வாரம் அலகாபாத்தில் பா.ஜ.கவின் செயற்குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தின் போதே ரீடா பகுகுணா ஜோஷி பா.ஜ.கவில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், அவர் நேற்று பா.ஜ.கவில் இணைந்த தகவல் வெளியானது.

பா.ஜ.கவில் இணைந்த பின்னர் ரீடா ஜோஷி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்.,

எல்லைக்கோடு பகுதியை (எல்.ஓ.சி) கடந்து பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில்  இந்திய ராணுவம் கடந்த மாதம் 28-ம் தேதி நள்ளிரவு தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலின் போது, 38 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலை அனைத்து கட்சிகளுமே பாராட்டிய நிலையில், ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து, காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. காங்கிரசின் இந்த நிலைப்பாடு என்னை மிகவும் வேதனைப்படுத்தியது.

கடந்த மாதம் 18-ம் தேதியன்று காஷ்மீரின் யுரி ராணுவ முகாமில் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அந்த தாக்குதலில், 19 வீரர்கள் பலியானார்கள். 30 வீரர்கள் காயம் அடைந்தார்கள். இதற்கு பதிலடி தரும் வகையிலேயே இந்திய ராணுவம் எல்லை கோடு கடந்து (எல்.ஓ.சி) தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் தீவிரவாதிகளை கொன்றது.

இந்திய ராணுவத்தின் மன உறுதியை சந்தேகிக்கும் வகையில், காங்கிரஸ், தாக்குதல் நடந்தது உண்மைதானா? என்பதை போல கேள்வி எழுப்பியுள்ளது. இது எனக்கு மிகவும் வேதனையை தந்தது. அந்த கட்சியில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை. எனவே அதில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்துள்ளேன் என்றார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலுக்கு டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலாதீட்சித்  காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பால் மனம் வேதனையடைந்து ரிடா பகுகுணா ஜோஷி பா.ஜ.கவில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. ரீடா பகுகுணாவும், பிராமண வகுப்பை சேர்ந்தவர். இருப்பினும் அவருக்கு உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் நிலை அளிக்கப்படாமல் ஷீலா தீட்சித்துக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளித்ததை  ரீடா பகுகுணாவால் ஏற்க முடியவில்லைஎன்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்