முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் சேலை கட்டி போராட்டம்: பிரதமர் வீட்டை முற்றுகையிட முடிவு

வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, தினமும் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகள் நேற்று சேலை அணிந்தும், நெற்றியில் பொட்டு வைத்தும் மத்திய அரசுக்கு எதிராக நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

32-வது நாளாக ...

தமிழக விவசாயிகள் கடந்த 32 நாட்களாக டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்திற்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் தீவிரம்

கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று 32-வது நாளாக நீடிக்கிறது. எலிக்கறி, பாம்புக்கறி தின்று போராட்டம், மொட்டை அடித்து போராட்டம் என தினமும் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்ததால், விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கண்டு கொள்ளவே இல்லை

நேற்று விவசாயிகள் சேலை அணிந்தும், நெற்றியில் பொட்டு வைத்தும் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தனர். இது பற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் குமுறலுடன் கூறியதாவது:-

இன்று (நேற்று) 32-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறோம். மிகவும் கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் எங்களை மத்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை. பிரதமர் மோடி சேலை கட்டி வரும் பெண்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்கிறார், எங்களை சந்தித்து பேச மறுக்கிறார். சேலை அணிந்து சென்றால் கண்டிப்பாக சந்திப்பார் என்பதால்தான் சேலை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அப்படியாவது மோடி எங்களை அழைப்பாரா? என்று பார்ப்போம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கோரிக்கை

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளில் கடன் தள்ளுபடியை ரூ.1 லட்சமாக குறைத்துள்ளதாகவும், கடன் தள்ளுபடி தொகையை வசூலிப்பதில் வங்கி அதிகாரிகள் எந்தவித நெருக்கடியும் கொடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளனர்.இதனை மத்திய அரசு நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் மனு கொடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றும் பட்சத்தில் விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.

விவசாயிகள் முடிவு

மேலும் பிரதமர் இதுவரை தங்களை சந்திக்காததால் அவரை நேரிடையாக சந்திக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்றோ அல்லது நாளையோ? டெல்லி கல்யாண் மகால் பகுதியில் உள்ள பிரதமர் வீட்டை முற்றுகையிட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் டெல்லியில் பிரதமர் வீடு அமைந்துள்ள பகுதியில் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்