முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ சோதனைகள் என்னைக் கட்டுப்படுத்தாது: மத்திய அரசை தொடர்ந்து விமர்சிப்பேன் - ப.சிதம்பரம்

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சி.பி.ஐ சோதனைகளைக் கட்டவிழ்த்துவிட்டு அரசுக்கு எதிரான எனது குரலை அடக்க நினைக்கும் மத்திய அரசின் முயற்சி வெற்றி பெறாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

வருமான வரிச் சோதனை

தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக மத்திய அமைச்சரவைக் குழுவின் முன் அனுமதியின்றி மத்திய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம்  ஒப்புதல் வழங்கியது தொடர்பாக டெல்லி, மும்பை, குர்கான், சென்னையில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் இல்லங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிபிஐ நேற்று காலை முதல் சோதனை நடத்தியது.

சிதம்பரம் அறிக்கை

இந்நிலையில், இச்சோதனை தொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது , "அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) பல்வேறு நிறுவனங்களுக்கும் அந்நிய முதலீட்டைப் பெற அனுமதி அளித்து வருகிறது. இந்த வாரியத்தில் ஐந்து செயலாளர்கள் செயல்படுகின்றனர். அவர்கள்தான் விண்ணப்பங்களை ஆராய்ந்து யாருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்கின்றனர். சட்டப்படியே எல்லா அனுமதிகளும் வழங்கப்படுகின்றன. அப்படியிருக்க எப்.ஐ.பி.பி-யின் செயலாளர்களை விடுத்து என் மீது மட்டும் குற்றச்சாட்டை முன்வைப்பது ஏன்?

சி.பி.ஐ அமைப்பை எனக்கெதிராகவும், எனது மகன் மற்றும் அவரது நண்பர்களுக்கு எதிராகவும் தவறாக பயன்படுத்துகிறது மத்திய அரசு. நான் அரசை விமர்சித்து எழுதுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவே இத்தகைய சோதனைகள் நடத்தப்படுகின்றன. சி.பி.ஐ சோதனைகளைக் கட்டவிழ்த்துவிட்டு அரசுக்கு எதிரான எனது குரலை அடக்க நினைக்கும் மத்திய அரசின் முயற்சி வெற்றி பெறாது. அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளும், பத்திரிகையாளர்களும், பத்தி எழுத்தாளர்களும், என்.ஜி.ஓ.க்களும் இத்தகைய அடக்குமுறையை சந்தித்திருக்கின்றனர். நான் இப்போது சொல்லிக்கொள்வதெல்லாம் அரசை விமர்சித்து தொடர்ந்து பேசுவேன், எழுதுவேன் என்பதை மட்டுமே" இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்