முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 20 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக‌ மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட‌ அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஆண்டு பருவ மழை சரியாக பெய்யவில்லை. இதனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து, முழுக் கொள்ளளவை எட்டவில்லை. இதனால் கர்நாடகா - தமிழகம் இடையே நதி நீர் பங்கீட்டு பிரச்சினை எழுந்தது.

இந்நிலையில் கர்நாடகாவில் பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த மே மாத இறுதியில் கோடை மழை தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக‌ காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் உள்ள‌ தலைக் காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை யில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்வதால் காவிரியிலும், அதன் துணை நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதே போல காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான‌ மைசூரு, மண்டியா, ராம்நகர், பெங்களூரு ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மண்டியா மாவட்டத் தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது. நேற்று மாலை நிலவரப் படி அணைக்கு வினாடிக்கு 1,297 கனஅடி நீர் வந்துகொண்டிருப்ப தால், வினாடிக்கு 1,078 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 124.8 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 68.95 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரியின் முக்கிய துணை நதியான கபினி நதி கேரளாவில் உற்பத்தியாகிறது. இந்நதி உற்பத்தியாகும் வயநாடு மலைப் பகுதியில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருவதால் கபினி அணைக்கும் நீர் வந்துகொண் டிருக்கிறது. இந்த அணைக்கு வினாடிக்கு 795 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.

கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளைப் போலவே காவிரியின் குறுக்கேயுள்ள ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 4 அணைகளின் நீர்மட்டமும் மெல்ல உயர்ந்து வருகிறது. நிகழாண்டில் பருவ மழைக்கு முன்பாகவே, நீர்வரத்து தொடங்கி இருப்பதால் கர்நாடகா மற்றும் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து