முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் அறிவிப்பால் பட்ஜெட் தாக்கல் தாமதமாகாது

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச. 27 - உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பட்ஜெட் தாக்கல் தாமதமாகாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய பொது மற்றும் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 5 மாநில தேர்தலையொட்டி மார்ச் 4 ம் தேதிக்கு பிறகே பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. 

இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் குரேஷியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொண்டுதான் தேர்தல் தேதி நிர்ணயிக்கப்படுகிறது என்றார். பட்ஜெட்டை தள்ளி வைக்க தேவையில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகளை பட்ஜெட் தாக்கல் செய்வதுடன் இணைத்து பார்க்க தேவையில்லை. இது ஒன்றும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சியில்லை என்று முன்னாள் தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், 

தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில்தான் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க முடியும். அதை மத்திய அரசு பின்பற்ற தேவையில்லை. பட்ஜெட் தாக்கல் போன்ற தேசிய அளவிலான விவகாரங்கள் அனைத்தும் வழக்கம் போல் மேற்கொள்ளலாம் என்றார். 

இதற்கு முன் தேர்தல் கமிஷனராக சேஷன் பணியாற்றிய காலத்தில் தேர்தலையொட்டி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை மத்திய அரசு தள்ளி வைத்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வாக்கு பதிவுகள் அனைத்தும் முடிவடைந்து விடும் நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதை தள்ளி வைக்க தேவையில்லை. எனினும் இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் கலந்தாலோசித்த பிறகே முடிவு செய்யப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்