வெற்றிச் சான்றிதழ்களுடன் நாளை டெல்லிக்கு வாருங்கள்: பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு மேலிடம் அழைப்பு

வியாழக்கிழமை, 23 மே 2019      இந்தியா
BJP 2018 10 20

புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களுடன் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் நாளை 25-ம் தேதி டெல்லி வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பா.ஜ.க. இந்த வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது.
இதற்கிடையே பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவை எப்போது நடத்துவது என்பது தொடர்பான ஆலோசனை தொடங்கி உள்ளது. அனேகமாக அடுத்த வாரம் பதவி ஏற்பு விழா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் தெரிந்தவுடன் அதற்கான வெற்றி சான்றிதழ்களுடன் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் நாளை 25-ந்தேதி டெல்லி வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். எனவே வருகிற சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக ஒருமனதுடன் மோடி தேர்வு செய்யப்படுவார். அதற்கான ஆவணத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் கையெழுத்திடுவார்கள். அந்த கடிதத்துடன் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அதன் அடிப்படையில் ஜனாதிபதி அழைப்பு விடுப்பார். அதன் பிறகு டெல்லியில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும். முக்கிய இலாகாக்களுக்கு புதிய முகங்கள் பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து