முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெற ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை :  உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெற அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கட்சியில், இணைந்த மாற்றுக் கட்சியினரை வரவேற்று  பேசினார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க, காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 31 ஆயிரம் பேர் சென்னையில் நேற்று அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.கவில் இணைந்தனர். கட்சியில் சேர்ந்தவர்களுக்கு அ.தி.மு.க உறுப்பினர் உரிமைச்சீட்டுகளை வழங்கி, முதல்வர் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் பேசியதாவது.,

அ.தி.மு.க என்னும், மகத்தான மக்கள் பேரியக்கத்தில், இணைய வந்திருக்கும் உங்கள் அனைவரையும் முதற்கண் அன்போடு வரவேற்கிறேன். இதுநாள் வரை தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, த.மா.கா., தேமுதிக, மதி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலும், இன்ன பிற அமைப்புகளிலும், பணியாற்றி வந்த 31,834 பேர் இன்று முதல் அ.தி.மு.கவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைந்துள்ளீர்கள். உங்கள் வரவு நல்வரவு ஆகுக. இனி, உங்கள் அரசியல் வாழ்வில் புது வசந்தம் மலரும்.

நீங்கள் அனைவரும் இன்றைக்கு உள்ள உற்சாகத்தோடு என்றைக்கும் அ.தி.மு.கவின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பை நல்கிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எல்லோரையும் அன்போடு அரவணைத்துச் செல்லும் உண்மையான ஜனநாயக இயக்கம் அ.தி.மு.க  என்பதால், நீங்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் அரசியலில் வெற்றிகள் பலவற்றைக் காண்பீர்கள். தமிழகத்தில் வாழும் மக்கள் அனைவரும் எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு என்னையே அர்ப்பணித்து அயராது உழைத்து வருகிறேன்.

எனது தலைமையிலான அரசு மக்களுக்கு ஆற்றி வரும் மகத்தான பணிகள் பலவற்றை நீங்களும் அறிந்திருப்பீர்கள். அவற்றை இனி நீங்கள் மக்கள் அனைவருக்கும் எடுத்துரைத்திட வேண்டும். விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் அ.தி.மு.க மகத்தான வெற்றியைப் பெற்றிடும் வகையில் நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வரவேற்றார். தங்களை அ.தி.மு.கவில்  இணைத்துக் கொண்டதற்காக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு கட்சியில் இணைந்தவர்கள் தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியை, தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக அ.தி.மு.க அலுவலகம் அருகே வருகை தந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.கவினர் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்