முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புதிய அமைச்சராக பாண்டியராஜன் பதவி ஏற்றுக்கொண்டார் : கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பாண்டியராஜன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சராக பொறுப்பேற்ற பாண்டியராஜனுக்கு அமைச்சர்கள், அ.தி.மு.க பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஜெயலலிதா புதிய மாற்றங்களை மேற்கொண்டார். பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய அமைச்சராக க.பாண்டியராஜன் நியமிக்க ஆளுநருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்று, கவர்னர் ரோசய்யா, பாண்டியராஜனை பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமித்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் ராஜ்பவனில் புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று பதவியேற்றார். நேற்று மாலை நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவிற்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை ஆளுநர் ரோசய்யா வரவேற்றார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை 4.35 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்பு விழா தொடங்கியது.

தலைமை செயலாளர் அனைவரையும் வரவேற்று பதவியேற்பு விழாவை அறிவித்தார். இதைத்தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் ஆளுநர் ரோசய்யா, புதிய அமைச்சர் பாண்டியராஜனுக்கு பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  அமைச்சர் பாண்டியராஜன், ஆண்டவன் பெயரால் பதவியேற்பு உறுதிமொழி மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் அனைவருடனும் முதலமைச்சர் ஜெயலலிதா குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த விழாவில் தலைமை செயலாளர் ராமமோகனராவ், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் அமைச்சர்கள், ஒ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, செல்லூர் கே.ராஜூ, எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் பாண்டியராஜனின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

புதிய அமைச்சராக பதவியேற்ற பாண்டியராஜன் நேற்று மாலையே தலைமை செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சர் பாண்டியராஜன் வாழ்க்கை குறிப்பு - கடந்து வந்த பாதை: புதிய அமைச்சராக பதவியேற்ற பாண்டியராஜன் விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டியில் 1959-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி பிறந்தார். பாண்டியராஜன் குடும்பத்தினருடன் ஆவடியில் வசித்து வருகிறார்.  இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

விளாம்பட்டியை சொந்த ஊராகக் கொண்ட பாண்டியராஜன், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டே பள்ளிப் படிப்பை முடித்த பாண்டியராஜன், கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் பி.டெக். பட்டம் பெற்றார். இதையடுத்து ஜாம்ஷெட்பூரில் எம்.பி.ஏ. படித்துமுடித்த அவர், மேற்குவங்கத்தில் உள்ள புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியில் சேர்ந்தார்.

அந்த அனுபவத்தைக் கொண்டு சென்னையில் கடந்த 1992-ல் மாஃபா (Mofoi) எனும் வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இதன்பின்னர்தான் பாண்டியராஜனாக இருந்த அவர், மாஃபா பாண்டியராஜனாக அறியப்பட்டார். மனிதவள மேம்பாட்டுத் துறையில் உள்ள அனுபவத்தால் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பல நாடுகளிலும் வேலை வாய்ப்புப் பெற முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.
அரசியலில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்ட பாண்டியராஜன், பின் தே.மு.தி.க.வில் இணைந்தார். பின் அ.தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டுடன் தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏ-வாக இருந்து வந்தார். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பாண்டியராஜன், அதிகாரப்பூர்வமாக அ.தி.மு.க.வில் இணைந்தார்.

இதையடுத்து ஆவடி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட வாய்ப்பு பெற்ற பாண்டியராஜன், மக்களின் குறைகளைக் கேட்டறிய டெக்னாலஜியின் துணைகொண்டு ’மை ஆவடி ஆப்’ (My Avadi App) எனும் செல்போன் செயலியை உருவாக்கி பிரபலம் ஆனார். தேர்தலில் வென்ற மாஃபா, பேரவையில் எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து அ.தி.மு.க தலைமையின் நன்மதிப்பைப் பெற்றார். குறிப்பாக தி.மு.க உறுப்பினர் தியாகராஜனின் ஆங்கில உரைக்கு, அவர் பாணியிலேயே பதிலளித்து அ.தி.மு.க உறுப்பினர்களிடையே பிரபலமானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்