முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபாய் நோட்டு விவகாரம், ராஜ்ய சபாவில் எதிர் கட்சிகள் அமளி நீடிப்பு

புதன்கிழமை, 30 நவம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் எதிர் கட்சிகள்  தொடர்ந்து கடும் அமளியில்  ஈடுபட்டு வருகின்றன. ராஜ்ய சபாவில் நேற்றும் எதிர் கட்சிகள் இந்த பிரச்சினை குறித்து அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டன.  காங்கிரஸ் ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள்  பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக அரசு வெளியிட்டுள்ள புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு ஏற்படும் துயரங்கள் காரணமாக இதுவரை  நாடு முழுவதும் இறந்த 82 பேருக்கும்,  சர்ஜிகல் ஆபரேஷன் நடவடிக்கைக்கு பின்னர்   உயிரிழந்த 25 ராணுவ வீரர்களுக்கும் அவையில் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டார்கள்.

எல்லைப்பிரச்சினை: ராஜ்ய சபாவில் எல்லைப்பகுதியில் தற்போது நிலவும் சூழல் குறித்து விவாதிப்பதற்கு எதிர் கட்சியினர் கோரிய போது அதனை அரசு ஏற்க மறுத்தது. அதேப்போன்று பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற முடிவு குறித்தும் விவாதிக்க வலியுறுத்தினார்கள். எதிர் கட்சியினர்  அவையில் மையப்பகுதியில் குவிந்து அரசுக்கு எதிராக கோஷம் போட்டார்கள். இதனால் மதியம் வரை அவையை துணை தலைவர் பி.ஜே.குரியன் நடத்தமுடியாமல் ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மதியத்திற்கு பின்னர் அவை மீண்டும் கூடியபோது, கேள்வி நேரத்தில்  எதிர் கட்சியினர்  சத்தம் போட ஆரம்பித்தார்கள். இதனால் கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ள முடியவில்லை. எதிர் கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் ஜம்மு அருகே நகர்டோவில் உள்ள ராணுவ யூனிட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  இரு அதிகாரிகள் உள்பட 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தற்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்றார். அதேப்போன்று அரசின் தவறான முடிவால்  82 நபர்கள் உயிரிழந்தனர் என்றும் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டினார்.

முடக்கம்: பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பழைய ரூபாய் நோட்டு செல்லாது என அரசு எடுத்த முடிவை கண்டித்து எதிர் கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. இவ்விவகாரத்தால் இரு அவைகளிலும் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல்  முடங்கி வருகின்றன. சர்ஜிகல் ஆபரேஷன்  நடவடிக்கை குறித்தும் , பழைய ரூபாய் நோட்டு செல்லாது என அரசு எடுத்த முடிவு குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதாக அவை முன்னவரும் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி கூறினார்.கரன்சி விவகாரம் குறித்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் கேள்வி எழுப்பினார்.

ஜெட்லி காட்டம் : இது குறித்து அருண் ஜெட்லி பதிலளிக்கையில்.   பழைய ரூபாய் நோட்டு முடிவு குறித்து சரத் யாதவ் தனது கட்சிக்குள் விவாதிக்க வேண்டும் பின்னர் அதை எதிர்ப்பதா? வேண்டாமா? என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும் .சரத் யாதவும் , நிதிஷ் குமாரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள்., ஆனால் சரத் யாதவ் அரசின் முடிவை எதிர்க்கிறார். ஆனால் அவரது கட்சியை சேர்ந்த நிதிஷ் குமார் அரசின் முடிவை ஆதரிக்கிறார். எனவே உங்கள் (ஐக்கிய ஜனதா தளம் ) கட்சி முடிவை எங்களிடம் கூறுங்கள் என்று ஜெட்லி ராஜ்ய சபாவில் காரசாரமாக விவாதித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்