முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மரிலிருந்து வெளியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்களின் வீடுகளை எரிக்கும் ராணுவம்

சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

மியான்மர்: மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு தப்பி வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் வீடுகளை எரித்து மியான்மார் ராணுவம் தொடர் வன்முறையில் ஈடுபட்டு வருகிறது.

மியான்மர்-வங்கதேச எல்லையை தங்கள் கிராமத்தைத் துறந்து கடந்து வந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் எல்லையின் இந்தப் புறத்திலிருந்து தங்களுடைய வீடுகள் எரிந்து சாம்பலாவதன் தீப்பிழம்பை பார்த்து துயருறுகின்றனர்.

“அது என்னுடைய கிராமம், எங்களுடைய வீடு இன்று மீண்டும் தீப்பிடித்து எரிவதைப் பார்த்தோம்” என்று ஃபாரித் ஆலம் என்ற ரோஹிங்கியர் தெரிவித்தார்.
எல்லையைக் கடக்கும் போது மியான்மர் படைகள் புதிதாகப் பதித்த நிலக்கண்ணி வெடிகளை கிராமத்தினர் பார்த்துள்ளனர்.

கடந்த 3 வாரங்களில் சுமார் 4 லட்சம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர். ஜெனீவாவில் யுனிசெஃப் அமைப்பு அளித்த தகவலின் படி இதில் 2,40,000 குழந்தைகள் அடங்குவர்.

ரோஹிங்கியர் ஆலம் கூறும்போது, “எங்களுக்கு கிராமத்தில் மிகப்பெரிய வீடு, 10 பேர் எங்கள் குடும்பத்தினர், ஆனால் எங்கள் வீட்டை அவர்கள் எரித்தனர். என் தந்தை கிராம மருத்துவர், ஒரு மருந்துக் கடையும் வைத்திருந்தோம், நிலம், கால்நடை என்று வைத்திருந்தோம், இன்று அனைத்தும் போய்விட்டது” என்றார்.

ஆகஸ்ட் 25-ம் தேதி மியான்மர் ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கிய முஸ்லிம் போராளிகள் போலீஸ் முகாம்களில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ராணுவம் இன அழிப்பில் ஈடுபடத் தொடங்கியது. இந்த ராணுவ வன்முறையில் 471 ரோஹிங்கிய முஸ்லிம் கிராமங்களில் 176 கிராமங்கள் சுடுகாடாகியுள்ளது.

73 வயது அபுல் பஷார் என்ற ரோஹிங்கியர் சுமார் 15 நாட்கள் நடந்தே வங்கதேசம் வந்து சேர்ந்துள்ளார், ஆனால் அவர் குடும்பத்தினர் நிலவரம் என்னவென்று தெரியவில்லை.
வங்கதேசத்தின் குடுபலாங் அகதிகள் முகாமில் உதவிப்பொருட்கள் லாரி வந்தவுடன் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் பொருட்களைப் பெற ஓடிச்சென்றனர்.

தினமும் பெரிய அளவில் வங்கதேசத்துக்கு ரொஹிங்கிய அகதிகள் வருவதையடுத்து பலருக்கும் இருப்பிடம், குடிநீர் தர முடியாமல் அந்நாடு தவித்து வருகிறது.

தொடர் வன்முறை நீடித்தால் சுமார் 10 லட்சம் ரோஹிங்கியர்கள் வங்கதேசத்துக்குள் நுழைவார்கள் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

அகதிகள் முகாமில் முஸ்லிம்கள் பலர், “யார் எங்களைக் காப்பாற்றுவார்கள்? எங்களுக்கு உணவு கொடுப்பது யார்? எங்களால் வேறு என்ன செய்ய முடியும்? அல்லாவை வழிபடுகிறோம். அவர் எங்களைக் காப்பாற்றுவார்” என்று மொகமது ஆஷிகுர் என்பவர் ஏ.பி.செய்தி நிறுவன நிருபரிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து