முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சல்மான்கான் படத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 28 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் தயாரிப்பில் உருவான லவ் யாத்ரி (காதல் பயணி) திரைப்படம் மீதும், இத்திரைப்படம் தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்வது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்  உத்தரவு பிறப்பித்துள்ளது.சல்மான் கானின் வென்ச்சர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட லவ் யாத்ரி திரைப்படத்துக்கு தணிக்கைத் துறை ஏற்கெனவே அனுமதி அளித்து, அக்டோபர் 5-ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இத்திரைப்படத்துக்கு லவ் ராத்திரி என்று பெயரிடப்பட்டிருந்தது. இது இந்துக்களின் பண்டிகையான நவராத்திரியை ஒட்டி அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருப்பதாகக் கூறி இப்படத்துக்கு எதிராக குஜராத் மற்றும் பிகாரில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டன. காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அப்படத்தின் பெயர் லவ் யாத்ரி என்று மாற்றப்பட்டது. எனினும், அது தொடர்பான சர்ச்சை ஓயவில்லை.

இந்நிலையில், திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்   மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கள் திரைப்படம் தொடர்பாக தேவையில்லாத சர்ச்சைகள் உருவாக்கப்படுவதாகவும், நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, இத்திரைப்படத்துக்கு ஏற்கெனவே தணிக்கைத் துறை அனுமதி அளித்துவிட்டது. இந்நிலையில் திரைப்படத்தின் பெயரை வைத்து தேவையற்ற வகையில் வழக்குத் தொடுப்பது, காவல் நிலையத்தில் புகார் அளிப்பது போன்றவற்றை அனுமதிக்கக் கூடாது. திரைப்படத்தின் தலைப்பை மையமாக வைத்து எந்த நடவடிக்கையும் கூடாது. இந்த விஷயத்தில் சல்மான் கான் மீதும் இதுபோன்ற நடவடிக்கைகள் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து