முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க.வின் மாநில கட்சிக்கான அந்தஸ்து பறிபோகாது:பிரேமலதா

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      தமிழகம்
Image Unavailable

திருவொற்றியூர் : பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால் தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

திருவொற்றியூரில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் முடிவுகள், ‘‘ஆப்ரேஷன் சக்சஸ் பட் பேசன்ட் டெட்’’ என்பது போல் உள்ளது. தி.மு.க.வின் வெற்றி, என்னை பொறுத்தவரை தமிழகத்திற்கு தோல்வி.

கூட்டணியில் இருப்பவர்கள், கேபினேட் மந்திரி அந்தஸ்து பெற்று டெல்லி சென்றால் தான், திட்டங்களையும், தமிழ்நாட்டிற்கு வேண்டியவற்றையும் உரிமையோடு கொண்டு வர வேண்டும்.

கடந்த முறை, அ.தி.மு.க., வில் 37 எம்.பி.க்கள், இருந்தும், போனார்கள், வந்தார்கள். கேபினேட்டில் இருந்தால்தான், எல்லா உரிமைகளையும் பெற்றுக் கொண்டு வர முடியும். அந்த வகையில் தற்போது தி.மு.க., எதிர் அணியில் உள்ளது. இது எந்த வகையில் பலனளிக்கும் என்று தெரிய வில்லை.

இந்தியா முழுவதும் ஒரு அலை வருகிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் வருவதில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் மோடியை தோற்கடித்து விட்டோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரை, தமிழ்நாடும், தமிழக மக்களும் தான் தோற்கடிக்கப் பட்டுள்ளார்கள். தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் வரவில்லை. இதற்கு காரணம், கூட்டணி  கேபினேட்டில் இல்லை. அது இந்த முறையும் தொடர்கிறது.

இந்தியாவின் அங்கம் தமிழகம். தனியாக பிரிந்தால், நிச்சயமாக தமிழகத்திற்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் போய்விடும். எங்கள் கூட்டணி சார்பில் எம்.பி., இல்லாவிட்டாலும், உரிமையோடு கேட்டு, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவோம். இக்கூட்டணி நிச்சயம் தொடரும்.

தே.மு.தி.க.வின் மாநில கட்சிக்கான அந்தஸ்து பறிபோகாது. கூட்டணியில் வெற்றி பெற்றிருந்தால், கேபினேட் பதவிகளை வாங்கி, நிறைய திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். அதற்கான வாய்ப்பை மக்கள் தரவில்லை என்பது தான் எனது வேதனை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து