முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம்: ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய மசோதா நிறுத்தி வைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

ஹாங்காங் : ஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதா, மக்கள் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்த ஹாங்காங், 1997-ம் ஆண்டு முதல் சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. அது முதல், சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது. இந்த நாட்டின் தலைமை நிர்வாக தலைவராக கேரி லாம் உள்ளார்.

இந்த நிலையில், அங்கு குற்ற வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, அங்கு வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இது, ஹாங்காங் மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

கடந்த 9-ம் தேதி ஹாங்காங்கில் லட்சக்கணக்கான மக்கள் போர்க்கோலம் பூண்டு, வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் ஹாங்காங் குலுங்கியது. இருப்பினும், இந்த சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் தலைமை நிர்வாக தலைவர் கேரி லாம் உறுதியாக இருந்தார். இதன் காரணமாக கடந்த 12-ம் தேதி நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை மூண்டது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி விரட்டியடிக்கிற நிலை ஏற்பட்டது.

இதையடுத்து கேரி லாம், தனது ஆலோசகர்களின் அவசர கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் மக்கள் போராட்டத்தால் நிலைமை கைமீறிப்போய்க் கொண்டிருப்பதால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில்  அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சர்ச்சைக்குரிய சட்ட திருத்த மசோதாவை நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மக்கள் போராட்டத்துக்கு நிர்வாகம் அடிபணிந்து விட்டதையே இது காட்டுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து