முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 வாரங்களில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

இரண்டு வாரங்களில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் வரும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

சென்னையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

11 ஆயிரத்து 360 லாரிகள் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இதுபோன்று தண்ணீர் யாரும் தந்ததில்லை. லாரிகள் சாலைகளில் செல்லும்போது பொதுமக்கள் அதிகமாக நின்று தண்ணீர் பிடிக்கும் காட்சியை பார்க்கிறோம். இதன் காரணமாக லாரிகளில் உள்ள பம்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெரிவித்தேன். தற்போது லாரிகள் 4 பம்புகள் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் 5 பம்புகள் (குழாய்கள்) பொருத்தப்படும். இதன்காரணமாக நேரம் மிச்சமாகும். பொதுமக்கள் குறைவான நேரத்தில் தண்ணீர் பிடிக்கலாம்.

இரு மடங்கு வசதி...

ஆன்லைனில் பதிவு செய்தாலும் தண்ணீர் லாரி வர நீண்ட நாட்கள் ஆகிறது என்ற தகவலைத்
தெரிவித்தார்கள். இதனைத் தவிர்க்க பக்கத்து மாவட்டத்தில் உள்ள லாரிகளை கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் நிரப்பும் இடங்களில் இரு மடங்கு வசதிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக லாரிகள் தண்ணீரை விரைவாகப் பிடிக்க முடியும். இதுபோன்ற நடவடிக்கையால் மக்களுக்குச் சிரமங்கள் குறையும்.

2 வாரங்களில்...

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் 2 வாரங்களில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டிற்கு இன்னும் நல்ல மழை தேவை உள்ளது. மழை நீர் சேகரிப்பு திட்டத்தைக் கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிறையக் குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் மழை நீர் வீணாகக்கூடாது என்பதற்காகத்தான் மழை நீர் சேகரிப்பைக் கட்டமைப்பை மாற்றி அமைத்துள்ளோம்.

நவம்பர் வரை...

சென்னையில் 525 எம்.எல்.டி தண்ணீர் வழங்கிவருகிறோம். 150 எம்.எல்.டி. தண்ணீர் பெற முதல்வர் இதற்கான திட்டத்தைத் துவக்கிவைத்துள்ளார். கூடிய விரைவில் 400 எம்.எல்.டிக்காக திட்டம் துவங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டு கடுமையான வறட்சி வந்தபோதுகூட 450 எம்.எல்.டி தண்ணீர்தான் வழங்கினோம். தற்போது வழங்கப்பட்டு வரும் தண்ணீரைத் தொடர்ந்து நவம்பர் வரை வழங்குவோம். இவ்வாறு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து