முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல்கலாம் போட்டியிடுவார்: மம்தா திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜுன் 16 - ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாம் போட்டியிடுவார் என்றும் தனக்கு ஆதரவாக முலாயம்சிங் யாதவ் இருக்கிறார் என்றும் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக கூறியுள்ளார். ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி வருகிற ஜூலை 19ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதேபோல இந்த தேர்தலில் தான் நிச்சயம் போட்டியிடப்போவதாக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா கூறியுள்ளார். இவருக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். பல்வேறு கட்சிகளின் ஆதரவை ஜெயலலிதாவும் நவீன் பட்நாயக்கும் கேட்டு வருகின்றனர். 

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை இந்த தேர்தலில் களமிறக்க திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு நேற்று டெல்லியிலிருந்து கொல்கத்தா புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, இந்த ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாம் நிச்சயம் போட்டியிடுவார் என்று மம்தா திட்டவட்டமாக கூறினார். 

நாட்டின் மிக உயரிய இந்த பதவிக்கு அப்துல்கலாம்தான் பொருத்தமானவர். ஏனென்றால் அவர் இந்த பதவியை ஏற்கனவே வகித்தவர். இதற்கான தகுதியும் அந்தஸ்தும் அவருக்கு இருக்கிறது என்றும் மம்தா கூறினார். அப்துல்கலாமை அனைத்து அரசியல்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஜனாதிபதி பதவியில் எந்தவிதமான அரசியலும் இருக்கக் கூடாது என்றும் மம்தா கூறினார். 

அப்துல்கலாமை வேட்பாளராக நிறுத்த முலாயம்சிங் யாதவும் மம்தா பேனர்ஜியும் கூட்டாக ஆதரவு தெரிவித்திருந்தபோதிலும் முலாயம்சிங் யாதவ் தனது முடிவை மாற்றிக்கொள்வார் என்ற அனுமானங்கள் நிலவிவரும் வேளையில் அப்துல்கலாம் போட்டியிடுவார் என்று மம்தா பானர்ஜி திட்டவட்டமாக கூறியுள்ளார். முலாயம்சிங் தனது முடிவை மாற்றிக்கொள்வார் என்ற தகவல் தவறானது.  முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, எனது தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர் அப்துல்கலாம்தான் என்றும் அவர் கூறினார். இந்த முடிவில் எந்த ஈகோவும் கிடையாது. சண்டை சச்சரவும் கிடையாது என்றும் அவர் வெளிப்படையாக தெரிவித்தார்.  

செய்தியாளர்களின் சில கேள்விகளுக்கு இந்தியில் பதிலளித்த மம்தா பானர்ஜி, எனது இந்தி சற்று மோசமாக இருக்கலாம். செய்தியாளர்களின் குழப்பத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் மம்தா விளக்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்