முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு

வெள்ளிக்கிழமை, 6 ஜனவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருச்சி, ஜன.6 - திருச்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கத்தில் ஏகாதசி விழாவையொட்டி நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பழமையானதும் nullலோக வைகுண்டம் என்றும், பெரிய கோவில் என்றும் அழைக்கப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழா வைகுண்ட ஏகாதசி விழா ஆகும். இவ்விழா கடந்த மாதம் 25​ம் தேதி பகல் பத்து திருநாள் துவங்கி அன்றிலிருந்து பல்வேறு அலங்காரத்தில் பெருமாள் புறப்பாடு நடந்தது. இதில் முக்கிய அலங்காரம் மோகினி அலங்காரத்தில் புறப்பட்ட பெருமாள் பகல்பத்து மண்டபம் சென்றார். அங்கு பல நிகழ்ச்சிகள் நடந்தன. பொது சேவை முடிந்து புறப்பட்ட பெருமாள் 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நேற்று அதிகாலை நடைபெற்றது. சொர்க்க வாசலுக்குள் நுழைய வேண்டும் என்பதற்காக மாலையில் இருந்தே பக்தர்கள் கார்த்திகை கோபுர வாசல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிக்குள் காத்திருந்தனர். நாள்ளிரவு 12 மணியளவில் அந்த கோபுர வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டர். வெளியில் நின்றிருந்தவர்கள் தடதடவென்று உள்ளே சென்று ஆரியபட்டாள் வாசலையொட்டி இருந்த வரிசையில் இடம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்து உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் சந்தனு மண்டபத்திலும், கிளிமண்டபத்திலும் நள்ளிரவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானம் திறக்கப்பட்டது. ரத்தின அங்கியுடன் வெளியே வந்த பெருமாளைக் கண்டதும் அங்கே குழுமியிருந்த பக்தர்களின் ரெங்கா, ரெங்கா என்ற முழக்கம் விண்ணைத் தொட்டது.

அங்கிருந்து மண்டபத்திற்கு பெருமாள் வந்தார். விசேஷ ஆராதனைகள் நடத்தப்பட்டன. பலத்த தடுப்பு வேலி அமைக்கப்பட்டு போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த முறை தன்வந்திரி சன்னதிக்கு செல்லும் மண்டபப் பகுதி சீரமைக்கப்பட்டு வயதானவர்களும், ஊனமுற்றவர்களும் பாதுகாப்பாக நின்று சொர்க்க வாசல் வழியாக பெருமாள் வரும் காட்சியை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 4.30 மணி அளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பரமபதவாசல் வழியாக வெளியே பெருமாள் வந்தகாட்சியை கண்டவர்கள் கைகூப்பி வணங்கினர். பெருமாள் திருகொட்டகையில் பிரவேசித்தார். சாரதா மரியாதைக்கு பின்னர் காலை 7.30 மணி அளவில் ஸ்ரீ நம்பெருமாள் திருமாமணி ஆஸ்தான மண்டபம் போய் சேர்ந்தார். வெளிப்புறப்பகுதியில் இரவு முழுவதும் தூங்காமல் இருந்த பக்தர்கள் பெருமாளை வணங்கிச் சென்றனர்.

சொர்க்க வாசலில் நுழைவதற்காக கோவிலுக்குள் துவங்கிய பக்தர்கள் வரிசை கோவில் வாசலையும் தாண்டி வெகு தூரத்திற்கு நீண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்க வாசலில் நுழைந்து சென்றனர். பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருவரங்கம் நாராயண ஜீயர் சுவாமிகள், இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், சுற்றுலாத்துறை ஆணையர் சந்திரகுமாரன், குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பரஞ்சோதி, மனோகரன், வைகைசெல்வன், டாக்டர் விஜயபாஸ்கர், மேயர் ஜெயா, மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட வருவாய் அலுவலர் மாணிக்கம், துணை மேயர் ஆசிக் மீரா, கோட்டத் தலைவர்கள் சீனிவாசன், லதா, ஞானசேகரன், மனோகரன், இளைஞர் மற்றும் இளம் பெண் பாசாறை செயலாளர் செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் வீரராகவ ராவ், அ.தி.மு.க. நிர்வாகிகள் வெல்லமண்டி நடராஜன், நாகநாதர் பாண்டி, டைமன்ட் திருப்பதி, வக்கீல் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் பெஸ்ட் பாபு, nullபதி, நாட்டாண்மை சண்முகம், முத்துலட்சுமி முருகேசன், டாக்டர் தமிழரசி, என்ஜினீயர் ராஜா, வி.என்.ஆர்.செல்வம், பொன்னகர் முரளி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் சொர்க்க வாசலில் நுழைந்து வெளியே வந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்