முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் தொடரில் இந்தியா அதிரடி பாகிஸ்தானை தவிடுபொடி

திங்கட்கிழமை, 19 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

மிர்பூர், மார்ச் - 19 - முத்தரப்பு ஒரு நாள் தொடரில் நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் இந்தியா அதிரடியாக விளையாடி பாகிஸ்தானை வெற்றிகண்டது. இதன்மூலம் இந்தியா இறுதிபோட்டி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.  வங்கதேசத்தின் மிர்பூர் நகரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா தான் விளையாடிய முதல் போட்டியில் இலங்கை அணியை வென்றது. ஆனால் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால் இந்தியா நேற்று பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய போட்டி மிக முக்கியமான போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றிபெற்றே தீரவேண்டும் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கியது. ஏற்கனவே போனஸ் புள்ளிகளுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட பாகிஸ்தான் அணி நெருக்கடி எதுவும் இல்லாமல் களமிறங்கியது.  டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் முகமது ஹபீஸ் மற்றும் நஸீர் ஜாம்ஷெட் ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை தந்தனர். இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து ரன்களைக் குவித்தது. இந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த ஜோடி 100 ரன்களை 17.3 ஓவர்களில் அடைந்தது. 200 ரன்களை 196 பந்துகளில் பெற்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த துவக்க ஜோடியில் முகமது ஹபீஸ் முதலில் சதமடித்தார். அடுத்து நஸீர் ஜாம்ஷெட் 98 பந்துகளில் சதமடித்தார். பாக். அணி 224 ரன்களை எடுத்திருந்தபோது முதல் விக்கெட்டாக நஸீர் ஜாம்ஷெட் அவுட்டானார்.112 ரன்கள் எடுத்திருந்த நஸீர், அஸ்வின் பந்தில் பதானால் கேட்ச் பிடிக்கப்பட்டார். அடுத்து 225 வது ரன்னில் முகமது ஹபீசும், அசோக் டிண்டாவின் பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய யூனிஸ்கான், உமர் அக்மலுடன் சேர்ந்து  அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பாகிஸ்தான் அணியின் ரன் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. 24 பந்துகளில் 28 ரன்களை அடித்த அக்மல், குமாரின் பந்தில் காம்பீரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து யூனிஸ்கான் 34 பந்துகளில் 52 ரன்களை குவித்து, குமாரின் பந்தில் சுரேஷ் ரெய்னாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். ஷாகித் அப்ரிடி 9 ரன்களிலும், ஹம்மத் ஆஸம் 4 ரன்களிலும் அவுட்டாகினர். இதையடுத்து பாக். அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை குவித்தது. மிஸ்பா உல் ஹக் 4 ரன்களுடனும், உமர்குல் ரன் எதுவும் எடுக்காமலும்  இருந்தனர். இந்திய தரப்பில் குமார் மற்றும் டிண்டா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், பதான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு இந்திய அணிக்கு  நிர்ணயிக்கப்பட்டது. துவக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கரும், காம்பீரும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காம்பீர் ரன் எதுவும் எடுக்காத நிலையில் முகமது ஹபீஸின் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து விராட் கோலி, சச்சினுடன் ஜோடி சேர்ந்தார் இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடியது. சச்சின் இந்த போட்டியில் துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். 19.3 ஓவர்களில் இந்திய அணி 133 ரன்களை எடுத்திருந்தபோது சச்சின் தனது 52 வது ரன்னில் சயீத் அன்வர் பந்தில் யூனிஸ்கானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதையடுத்து கோலியுடன் ரோஹித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் பாக். பந்துவீச்சை பதம்பார்த்தது. பாகிஸ்தான் அணியைப் போலவே இந்திய அணியும் 196 பந்துகளில் 200 ரன்களை கடந்தது. விராட் கோலி 97 பந்துகளில் 100 ரன்களை கடந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய இந்திய அணி 45.5 ஓவர்களில் 305 ரன்களை கடந்திருந்தபோது 68 ரன்களை எடுத்திருந்த ரோஹித் சர்மா, உமர்குல்லின் பந்தில் அவுட்டானார். 47.1 ஓவரில் இந்திய அணி 318 ரன்களை எடுத்திருந்தபோது 148 பந்துகளில் 183 ரன்களை எடுத்திருந்த விராட் கோலி, உமர்குல்லின் பந்தில் ஹபீசால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி பவுண்டரி அடித்து இந்தியாவை வெற்றிபெறச் செய்தார். இந்திய அணி 47.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாக். அணியை வென்றது.  அதிரடியாக 183 ரன்களை குவித்த விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்