முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூச விழா கோலாகலம் - அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

மதுரை : முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் முருகனின் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 26-ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தினமும் சுவாமி காலை, மாலை இரு வேளைகளில் வீதி உலா வந்தது. கடந்த 4-ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெற்றது. நேற்று தைபூச தினத்தையொட்டி உற்சவர் சுப்ரமணியர் தேவசேனா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரகணக்கான பக்தர்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பெரிய ரத வீதியில் உள்ள ஆண்டவர் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழநி முருகன் கோயிலில் கடந்த 2-ம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. நேற்று முன்தினம் அருள்மிகு முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் பழனி பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்றது. பழநி முருகனை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், ஆட்டம், பாட்டம் கொண்டாடத்துடன் அரோகரா கோஷத்துடன் முருகனை வழிபட்டனர். நேற்று மாலை பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வானை தேரோட்டம் நடைபெற்றது.

முருகப்பெருமானின் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வேல்களால் அலகு குத்தியும், காவடி, பால்குடம் எடுத்து குழு குழுவாக கோயிலை வலம் வந்தனர். பக்தர்கள் அதிகாலையிலிருந்து கடல் மற்றும் நாழிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் சில பக்தர்கள் அதிகாலையிருந்து கிரி பிரகாரத்தில் அங்கபிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பால் குடம் மற்றும் காவடி எடுத்து வந்த பக்தர்கள் கோயில் முகப்பில் ஆடிப்பாடியது பரவசத்தை ஏற்படுத்தியது.

திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி நேற்று  அதிகாலை 5 மணிக்கு மூலவர் முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தங்க கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள்  அணிவித்து சிறப்பு தீபாராதனை காண்பித்தனர்.  காலை 10 மணி மற்றும் மாலை 4 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் மூலம் சிறப்புஅபிஷேகம்,  அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நேற்று இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்திலும் 7.30 மணிக்கு தங்கத்தேரிலும் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  திருத்தணி  பெரியார் நகரில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் கோவிலில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 7. 30 மணிக்கு சன்மார்க்க  கொடிஉயர்த்தப்பட்டு, 8 மணிக்கு தீபாராதனை நடத்தப்பட்டது. அகவல் பாராயணம்   நடந்தது. மதியம் 12 மணிக்கு ஏழுதிரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மதியம் 2 மணி  முதல் மாலை 6 மணி வரை பஜனை மற்றும் பக்தி பாடல்கள் பாடப்பட்டது. மாலை 7 மணிக்கு மகாதீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது. இதே போல் திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட முருகன் கோவில்களிலும் தைப்பூச விழா கோலாகலமாக நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து