முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இலங்கையை ஒயிட்வாஷ் செய்து இந்தியா சாதனை வெற்றி

திங்கட்கிழமை, 14 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

பல்லகலே : இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கண்டி மாவட்டம் பல்லகெலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி ஷிகர் தவான்(119 ரன்கள்) ஹர்திக் பாண்ட்யா(108 ரன்கள்) ஆகியோர் அபார ஆட்டத்தின் மூலம் 122.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து   இந்திய அணி 487 ரன்கள குவித்தது.

இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இலங்கை அணி,  வழக்கம் போல் தகிடுதத்தம் போட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் தரங்கா (5 ரன்), கருணாரத்னே (4 ரன்) இருவரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமியின் சீற்றத்துக்கு இரையானார்கள். இதன் பிறகு குல்தீப் யாதவ், சுழல்வித்தை காட்டி மிரட்ட, இலங்கை அணி முற்றிலும் சீர்குலைந்தது. கேப்டன் சன்டிமால் (48 ரன், 87 பந்து, 6 பவுண்டரி) மட்டுமே கொஞ்சம் போராடிப் பார்த்தார். மற்றவர்கள் ஒரேயடியாக ‘சரண்’ அடைந்தனர்.

‘பாலோ–ஆன்’ ஆபத்தை தவிர்க்க 288 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 37.4 ஓவர்களில் 135 ரன்களுக்கு முடங்கி பாலோ–ஆன் ஆனது. இந்திய அணி ‘பாலோ–ஆன்’ வழங்கியதால் இலங்கை அணி 352 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2–வது இன்னிங்சை விளையாடியது. ஆட்ட நேர முடிவில் அந்த அணி தரங்காவின் (7 ரன்) விக்கெட்டை இழந்து 19 ரன்கள் எடுத்து இருந்தது.

3 ஆம் நாள் ஆட்டம் இன்று காலை துவங்கியதும்,  இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இலங்கை அணி தாரைவார்த்தது.  இலங்கை அணியில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் அரைசதம் கூட அடிக்கவில்லை. 74.3 ஓவர்கள் விளையாடிய இலங்கை அணி 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதன்மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் சமி 3 விக்கெட்டுகளையும் அள்ளினர். இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று தொடரை ஒயிட் வாஷ் செய்துள்ளது.  அந்நிய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய அணி வென்றிருப்பது இதுதான் முதல் தடவையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து