முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2019 பாராளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவுக்கு எதிராக போராட்டம் நடத்த சமாஜ்வாடி திட்டம்

சனிக்கிழமை, 30 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ: 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த, உ.பி.யின் சமாஜ்வாடி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்காக அக்கட்சி போராட்டத்தில் இறங்கவுள்ளது.

ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்தவுடன் ஏதேனும் ஒரு மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு எதிர்ப்பு கிளம்புவது வழக்கமாக உள்ளது. தற்போது, பாஜக வெற்றி பெற்ற, குஜராத், இமாச்சலப் பிரதேச தேர்தலுக்குப் பிறகு இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

''2019-ல் வரும் மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது. இதற்கு பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்'' என வலியுறுத்தி சமாஜ்வாடி கட்சி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஜனவரி இரண்டாவது வாரத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் இக்கட்சியின் தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் முடிவு செய்துள்ளார்.

இது குறித்து சமாஜ்வாடி செய்தித் தொடர்பாளர் ராஜேந்தரா சவுத்ரி கூறும்போது, ''ஜனநாயகத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு முறையால் ஒரு குறிப்பிட்ட கட்சி பலன் பெறுவதாக பல்வேறு கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. தேர்தலை நியாயமாக நடத்த வேண்டுமானால் பழைய வாக்குச்சீட்டு முறை 2019 தேர்தலில் அமலாக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்துவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க உள்ளோம். பிறகு தேசிய அளவில் போராட்டம் தொடங்குவோம்'' என்றார்.

இதற்கிடையே, குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்ட முறைகேடுதான் காரணம் என உ.பி. காங்கிரஸ் புகார் செய்துள்ளது. இதை வலியுறுத்தும் வகையில் அலகாபாத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பூஜை போடும் போராட்டம் நடத்தியது. எனவே காங்கிரஸ் அளிக்கும் ஆதரவைப் பொறுத்து மின்னணு வாக்குப்பதிவுக்கு எதிரான சர்ச்சை மீண்டும் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து