முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'இளைஞர்களுக்கு வழிவிடவேண்டும்' : ராகுல் காந்தி பேச்சால் ஈர்க்கப்பட்டு கோவா காங்கிரஸ் தலைவர் ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

பனாஜி: இளைஞர்களுக்கு கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் வழிவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாநாட்டில் பேசியிருந்தார். அவரின் வார்த்தையால் ஈர்க்கப்பட்ட கோவா மாநில காங்கிரஸ் தலைவர் சாந்தாராம் நாயக் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான 84-வது 2 நாள் மாநாடு கடந்த வாரம் நடந்தது. இதில் நிறைவு நாளின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களுக்கும், மூத்த தலைவர்களுக்கும், இடையே பெரிய சுவர் இருக்கிறது. அதை உடைக்க முயற்சிகள் எடுக்கப்படும்.அதேசமயம், இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் அளிக்கும் வகையில், மூத்த தலைவர்கள் வழிவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்

இந்த வார்த்தைக்கு மதிப்பளித்து கோவா மாநில காங்கிரஸ் தலைவர் சாந்தா ராம் நாயக் தனது தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக லூசின்கோ பிஹாரியோ தற்காலிகத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதியில் இருந்து ராம் நாயக் தலைவர் பதவி வகித்து வந்த நிலையில் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைமைக்கு அனுப்பிவைத்தார்.
ராகுல் காந்தி கேட்டுக்கொண்ட பின்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர் பதவியை ராஜினாமா செய்த முதல் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

71 வயதான சாந்தாராம் நாயக் பானாஜியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ''இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதற்கு மதிப்பு அளித்து எனது தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்துவிட்டேன். தேசிய மாநாட்டில் ராகுல் காந்தியின் பேச்சு என்னை ஈர்த்துவிட்டது. இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க நான் வழி விடுகிறேன்.

தேசிய மாநாட்டில் ராகுல்காந்தி பேசும்போது மேடை முழுவதும் காலியாக இருக்கிறது, இளைஞர்கள் பொறுப்புகளை ஏற்க வரலாம் என்றார். அதற்கு மதிப்பளித்துதான் நானும் விலகிவிட்டேன். இளைஞர்கள் கட்சியை வழிநடத்தவேண்டிய நேரம் இது.கட்சியில் உள்ள மூத்த தலைவர்களும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை திறந்துவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' எனத் தெரிவித்தார்.

கடந்த 1984-ம் ஆண்டு கோவாவில் மக்களவை எம்.பி.யாகவும், இருமுறை மாநிலங்கள்வை எம்.பி.யாகவும் நாயக் பதவி வகித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து